சிறப்பு செய்திகள்

இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று கழகத்தின் துரோகிகளை வீழ்த்துவோம் – தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் சபதம்…

சிவகங்கை:-

சட்டமன்ற இடைத்தேர்தலில்அமோக வெற்றிபெற்று கழகத்தின் துரோகிகளை வீழ்த்துவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எச்.ராஜாவையும், மானாமதுரை சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் எஸ். நாகராஜனையும் ஆதரித்து சிவகங்கை, இளையான்குடி பேருந்து நிலையம், மானாமதுரை தேவர் சிலை, திருபுவனம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-

நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் நாட்டிற்கு மிக முக்கியமான தேர்தல் ஆகும். நாடு முன்னேற்றம் அடைய மத்தியில் நிலையான, வலிமையான, திறமையான, உறுதியான பிரதமர் வேண்டும். அண்டை நாடுகள் இந்திய நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை நாட்டிலே ஊடுருவச்செய்து, நம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நேரத்தில் இந்திய நாட்டிற்கு வலிமையான, திறமையான, உறுதியான பிரதமர் வேண்டும். அத்தகைய ஆற்றல் உள்ள பிரதமர் தான் நரேந்திரமோடி. அவர் மீண்டும் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகத்தான், நாம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறோம்.

இந்தக்கூட்டணி மெகா கூட்டணி, வெற்றிக்கூட்டணி, கொள்கை பிடிப்புள்ள கூட்டணி, மக்கள் நலன் சார்ந்த கூட்டணி ஆகும். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வேட்பாளராக போட்டியிடும் எச்.ராஜா ஒரு சிறந்த நிர்வாகி, திறமையானவர், எதைச் செய்ய வேண்டும் என்றாலும் உடனுக்குடன் அதை செய்து முடிக்கும் ஆவலோடு உள்ளவர். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை வேகமாகவும், துரிதமாகவும் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர், இந்த தொகுதி மென்மேலும், வளம் பெற பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வேட்பாளர் எச்.ராஜாவுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி ஒரு அராஜக கூட்டணி, ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அந்த கூட்டணி மக்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டது. அந்த கூட்டணியில் உள்ள வைகோ, தி.மு.க.வில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்லி தான் வெளியே சென்றார். எந்த காலத்திலும் தி.மு.க. கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது எனவும், ஸ்டாலின் ஒரு கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாதவர் எனவும் கூறினார். ஆனால் தற்போது மீண்டும் இந்த கூட்டணியுடன் சேர்ந்து கொண்டு, ஸ்டாலினை முதலமைச்சராக்கி, ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்பேன் எனப் பேசிவருகிறார்.

அதுவும் தற்போது ஈரோட்டில் தி.மு.க. சின்னத்தில் வைகோ கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார். இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி தான், தி.மு.க. தலைமையிலான கூட்டணி. மேலும், தந்தையின் செல்வாக்கில் பதவிக்கு வந்தவர் ஸ்டாலின். அடிமட்ட தொண்டர்களின் கஷ்ட, நஷ்டத்தைப் பற்றி அவருக்கு தெரியாது. ஆனால் நாங்கள் மக்களோடு மக்களாக பழகி படிப்படியாக கட்சியில் உயர்ந்த பதவிக்கு வந்தவர்கள். இந்தியாவிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரே கட்சி தி.மு.க. தான். இந்த தேர்தலில் துரோகிகளுக்கு, பொதுமக்கள் தக்க பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.

தமிழர் திருநாளான தைப்பொங்கலை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் ரூ.1000 வழங்கக் கூடாது என தி.மு.க. கெட்ட எண்ணத்துடன் நீதிமன்றத்திற்கு சென்றது. இருப்பினும் நீதிமன்றம் ரூ.1000 வழங்க தடையில்லை என அறிவித்ததன் அடிப்படையில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதேபோன்று, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என நான் அறிவித்தேன்.

ஏழைத் தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற நிதியை தடுத்திடும் வகையில் தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து, தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் ரூ.2000 வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது, அதற்குப் பிறகு 2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, பல்வேறு புதிய மின் திட்டங்களை அறிவித்து, மின் தட்டுப்பாட்டை அறவே அகற்றியதன் மூலம் தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளின் நண்பனாக உள்ள ஆட்சி அ.இ.அ.தி.மு.க ஆட்சி. தமிழகத்தின் வளர்ச்சியை எண்ணி இந்த வெற்றிக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதியில், 1996ல் இருந்து 33 ஆண்டுகளாக பெரியாறு அணையிலிருந்து சிவகங்கை தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்தது. ஆனால் இந்தாண்டு தான் தெப்பக்குளம் நிரப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் ஆண்டுகளில் தண்ணீர் நிரப்பப்படும்.

இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வீரமங்கை வேலுநாச்சியாருக்கு நினைவு மண்டபம் அம்மாவின் அரசால் அமைக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே எஸ்.ஆர். பட்டணம் கண்மாய்க்கு நீர் நிரப்புவதற்காக கொடுக்கம்பட்டியில் ரூ.7 கோடி செலவில் அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. ரூ.3.50 கோடி செலவில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கு ரூ.40 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் காளையார்கோவில், நாட்டரசன் கோட்டை, பிரபுமங்கலம், கீழபூங்கொடி, மாங்குடி ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ரூ.3.13 கோடி செலவில் 17 இடங்களில் கால்நடை இணை மருந்தகங்கள் அமைக்கப்பட்டு, கால்நடைகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைவருக்கும் கல்வி வழங்கும் நபார்டு திட்டத்தின் கீழ் கூடுதல் பள்ளி கட்டிடங்களுக்காக ரூ.5.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 12 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற மக்கள் நலனுக்காக பணியாற்றிவரும் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, நல்லாட்சி தொடர்ந்திட, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எச்.ராஜாவுக்கு தாமரை சின்னத்திலும், மானாமதுரை சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் எஸ்.நாகராஜனுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.