தற்போதைய செய்திகள்

இடைத்தேர்தலை போல உள்ளாட்சி தேர்தலிலும் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சபதம்

திருவண்ணாமலை:-

இடைத்தேர்தலை போல உள்ளாட்சித் தேர்தலிலும் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சபதம் மேற்கொண்டார்.

வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், கலசப்பாக்கம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:-

நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழங்கிய தேர்தல் வியூகத்தை சிறப்பாக செயல்படுத்தி கழக வேட்பாளர்களை அமோக வெற்றி பெற வைத்தோம். அதேபோல் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தலைமைக் கழகம் அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கரங்களை வலுப்படுத்த உறுதி ஏற்க வேண்டும்.

சட்டமன்ற இடைத்தேர்தலில் எவ்வாறு பணியாற்றினோம் என்பது குறித்து அங்கு பணியாற்றிய அனைத்து கழக நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும் நன்றாக தெரிந்திருக்கும். அதேபோல் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு மாவட்ட நிர்வாகியை நியமித்து அவர்களின் கீழ் வட்ட செயலாளர்கள் மற்றும் ஊராட்சி கழக நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றி கழகத்திற்கு வெற்றியை தேடி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.