ராமநாதபுரம்

இடைத்தேர்தல்- உள்ளாட்சி தேர்தலில் கழகம் இமாலய சாதனை படைக்கும் – ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனிசாமி உறுதி

ராமநாதபுரம்:-

இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று கழகம் இமாலய சாதனை படைக்கும் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார்.

நாங்குநேரி இடைத்தேர்தல் பணி குறித்தும், வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பணி குறித்தும் ராமநாதபுரம் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது:-

இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சிய முழக்கத்தை நிறைவேற்றும் வண்ணம் முதலமைச்சர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். குறிப்பாக 13 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகத்திற்கு ரூ.8,800 கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்து 37,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளார்.

மேலும் தாலிக்கு தங்கம் திட்டம், மாதம் தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி, மாணவர்களுக்கு மடிகணினி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, என்று அம்மாவின் திட்டங்களை அனைத்தும் தொடர்ந்து வழங்கி வருகிறார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தமிழகத்தில் உள்ள 2 கோடி குடும்பங்களுக்கு மேல் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கியுள்ளார்.

விரைவில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 2000 ரூபாய் வழங்கவுள்ளார். இதுபோன்ற சாதனை திட்டங்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.கழக அரசின் இந்த சாதனை திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களிடம் நீங்கள் எடுத்துக் கூற வேண்டும். ஏனென்றால் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளும், 3 பேர் பேரூராட்சிகளும், 14 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அனைத்து பஞ்சாயத்திலும் கழகம் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். அது மட்டுமல்லாது திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒரு இடம்கூட உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறவில்லை என வரலாற்றை உருவாக்கி தர வேண்டும்.

வருகிற 21-ந் தேதி நாங்குநேரி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் கழகத்தின் வேட்பாளராக ரெட்டியார்பட்டி நாராயணனை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அறிவித்துள்ளனர். நமக்கு நாங்குநேரியில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்குநேரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் கழகம் முதன்மை வாக்கு பெற்றது என்ற வரலாற்றை உருவாக்குவதோடு கழக வேடப்ாளரை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து அந்த வெற்றிக்கனியை அம்மாவின் அருள் ஆசியுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.