சிறப்பு செய்திகள்

இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற அம்மாவின் அரசு தொடர் நடவடிக்கை – முதலமைச்சர் உறுதி..

சேலம்:-

இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற அம்மாவின் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சேலத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம், போஸ் மைதானம், நேரு கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் ஆற்றிய உரை வருமாறு:

சேலம் மாநகரில் பிரம்மாண்டமான முறையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாபெரும் கடன் உதவிகள் வழங்கும் விழா, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் கடன் உதவிகள் வழங்கிய சிறந்த வங்கிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, ஏற்கனவே நடைபெற்று வந்த முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அனைத்து விழா நிகழ்ச்சிகளும் சிறப்புடன்இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சேலம் மாநகரில் பிரம்மாண்டமான முறையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா வழிகாட்டுதலின் பேரில், அம்மா அவர்கள் அறிவித்த திட்டங்களை அம்மாவினுடைய அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 27.2.2002 அன்று சேலம் மாநகரில் நடைபெற்ற அரசு விழாவில் சேலம் மாவட்டத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் தொகுதிகள் அனைத்தும் உங்களுக்காகவே என்று உங்கள் அன்புச் சகோதரியாகிய எனக்கே அளித்தீர்கள். என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைதானே அதற்குக் காரணம். ஆகவே தான் உங்கள் அன்புச் சகோதரியின் அகராதியில் சேலம் என்றால் நம்பிக்கை என்று எழுதப் பட்டிருக்கிறதென்று அழகாகச் சொன்னார்கள்.

நான் உங்கள் மீது வைத்த நம்பிக்கை 100 சதவிகிதம், என்னிடம் உங்கள் பாசம் 100 சதவிகிதம், இது வெறும் அரசு விழா கூட்டம் அல்ல, உங்கள் அன்பு சகோதரி தன் நன்றியைத் தெரிவிக்கும் நன்றி அறிவிப்புக் கூட்டம், நன்றியை வார்த்தையில் மட்டும் வைத்துவிட்டால் நலத்திட்ட உதவிகள் வடிவிலும், வேறு பல திட்டங்கள் வடிவிலும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் கொண்டு வந்திருக்கின்றேன் என்று சேலம் மாவட்டத்துடன் தனக்குள்ள நெருக்கத்தினை வெகு அழகாக இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா எடுத்துரைத்தார் என்பதை இந்த நேரத்திலே கோடிட்டு காட்ட விரும்புகின்றேன்.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் அம்மா அவர்கள் ஏற்கனவே கூறியபடி சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் அம்மாவின் தலைமையிலான அரசு தொடர்ந்து ஆட்சி புரிகின்ற வெற்றியைத் தேடித் தந்த மாவட்டம் சேலம் மாவட்டம் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். மகத்தான வெற்றியை தேடித் தந்த இம்மாவட்ட மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களுடன் நலத்திட்ட உதவிகளும் வழங்க நான் இன்று இங்கு வந்துள்ளேன்.

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூபாய் 140 கோடியே 31 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் அல்லிக்குட்டை, நேரு நகர், காந்தி நகர், பெரியார் நகர் மற்றும் அவ்வை நகர் பகுதிகளில் 1476 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி, சேலம் மாநகராட்சி சார்பில் தொங்கு பூங்கா வளாகத்தில் ரூபாய் 10 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மண்டபத்தினை மேம்படுத்தும் பணிகள் உட்பட ரூபாய் 202 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 34 புதிய திட்டப் பணிகளுக்கு நான் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அடிக்கல் நாட்டியுள்ளேன்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆத்தூர், எடப்பாடி, நரசிங்கபுரம் ஆகிய மூன்று நகராட்சிகளில் ரூபாய் 5 கோடியே 75 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நுண்உர செயலாக்க மையம், நுண்உர மையம், சுற்றுச்சுவர் மற்றும் அணுகு பாதை உள்ளிட்ட ரூபாய் 64 கோடியே 73 இலட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற 35 புதிய பணிகள் இன்றைய தினம் என்னால் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் ரூபாய் 20 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பீட்டில் 124 மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனம் உட்பட ரூபாய் 2 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளன. இன்றையதினம் 43,274 பயனாளிகளுக்கு ரூபாய் 164 கோடியே 77 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் என்னால் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வழங்கப்படவுள்ளன.

பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே ஒரு நாட்டின் வளர்ச்சியை அளவிட முடியும் என்பதை உணர்ந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா, அரசு தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மகளிர் காவல் நிலையம், மகளிர் எழுத்தறிவுத் திட்டம், மகளிர் தொழில்முனைவோருக்கான பிரத்யேக தொழிற்பேட்டைகள், மகளிர் மேம்பாட்டுக் கழகம், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் போன்ற மகளிர் வாழ்வாதார திட்டங்களை அறிவிப்பு செய்து செயல்படுத்தி வருகிறது.

வளரும் தென்னை மரமே நீ, வளர்ந்ததைப்போல் நான் நிமிர்ந்து நிற்பேன், வணங்கி வளையும் நாணல் நீ, வளைவதைப்போல் நான் தலைகுனிவதில்லை என்று அம்மா அவர்கள் ஒரு பாடலைப் பாடியுள்ளார். ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமமாக உயர வேண்டும். ஆனால், அவர்கள் பொருளாதார ரீதியில் அதிகாரம் பெற்று தமது சொந்தக் காலில் நிற்கும் வலிமையும் தன்னம்பிக்கையும் பெற வேண்டுமென்றால், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் அனைவரும் பொருளாதார நிலையில் உயர்வு பெற்று தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையிலும், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சுய தொழில் புரிந்து வருவாய் ஈட்டி, வறுமை நீங்கி வளமுடன் வாழ்வதற்காகவும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வெற்றிகரமான முறையில் செயல்பட்டு அம்மா அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இந்தக் குழுக்கள் மூலம் பல்வேறு தொழில்களில் பெண்கள் ஈடுபட்டு, பல பொருட்களைத் தயாரித்து, விற்பனை செய்து தங்கள் வாழ்வாதார நிலையை உயர்த்திக் கொண்டார்கள்.

இன்றையதினம் 2017-2018-ம் ஆண்டில் வங்கிக் கடன் இணைப்பு இலக்கை ரூபாய் 7000 கோடி நிர்ணயிக்க செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், ரூபாய் 2 லட்சத்து 72 ஆயிரத்து 089 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 8332 கோடி கடன் வழங்கி சாதனை படைத்த அரசு அம்மாவினுடைய அரசு என்பதை பெருமையுடன் இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.

2011-2012-ம் ஆண்டு முதல் 2017-2018ஆம் ஆண்டு வரை ரூபாய் 41 ஆயிரத்து 180 கோடி பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலமாக சுய உதவிக் குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விழைகின்றேன். சுய உதவிக் குழு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு ஒரு சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்பதை இங்கே பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

`பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங் கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி’ என்று பாரதியார் பாடியுள்ளார். இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு சமமாக பணிபுரிந்து சாதனை படைத்து வருகிறார்கள்.

அம்மா வழியில் சேலம் மாவட்டத்தில்ர் இன்றையதினம் மட்டும் சுமார் 2750 குழுக்களுக்கு கிட்டத்தட்ட 42600 உறுப்பினர்கள் கொண்ட சுயஉதவிக் குழுக்களுக்கு சுமார் ரூபாய் 157 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கடனுதவியை பெறுகின்ற மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சுயமாக தொழில் தொடங்கி, வருவாய் ஈட்டி, தங்கள் வாழ்க்கைத் தரத்தை பொருளாதார நிலையிலும் மேம்படுத்திக்கொள்ள எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைதி, வளம் வளர்ச்சி என்ற அம்மாவின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள், மக்கள் நலம் காக்க மக்கள் நலத் திட்டங்கள் என்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களை அம்மாவினுடைய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த மாவட்டத்தில் அம்மாவின் அரசால் நிறைவேற்றப்பட்ட சில திட்டங்களைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

படித்த ஏழை பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவிடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 7,243 பயனாளிகளுக்கு18 கோடியே 11 லட்சம் ரூபாய் நிதியுதவியும், 57 ஆயிரத்து தொள்ளாயிரத்து 44 கிராம் தங்கமும் இந்தத் திட்டத்தின் வாயிலாக ஏழைக் குடும்பத்திலே பிறந்த பெண்களுக்கு, திருமண உதவி திட்டத்தின் கீழ் இந்த உதவியை அம்மாவின் அரசு செய்திருக்கிறது. பட்டம், பட்டயம் படித்த ஏழை பெண்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 7,157 பயனாளிகளுக்கு 35 கோடியே 79 லட்சம் ரூபாய் நிதியுதவியும், 57 ஆயிரத்து 256 கிராம் தங்கமும் வழங்கப்பட்டிருக்கின்றது.

மாணவர்களுடைய கல்வி மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக விஞ்ஞான கல்வி, அறிவுபூர்வமான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதற்காக நம்முடைய மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரத்து 536 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.

பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருவதற்கும், பள்ளி முடிந்து குறித்த நேரத்தில் வீட்டிற்கு சென்றடைவதற்கும் விலையில்லா மிதிவண்டி அளிப்பதை அம்மா நடைமுறைப்படுத்தினார். அந்தத் திட்டத்தின் வாயிலாக, நம்முடைய மாவட்டத்திலிருக்கின்ற மாணவச் செல்வங்களுக்கு 16 ஆயிரத்து 593 மிதிவண்டிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதேபோல 73 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேட்டூர் நகரப்பகுதிக்கான பாதாள சாக்கடைத் திட்டப்பணியில் இதுவரை 92 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்.

அதேபோல, 158 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேச்சேரி மற்றும் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 698 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 6 பேரூராட்சிகளுக்கு காவிரி நீர் பாதுகாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு 17.11.2018 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டு, இன்றைக்கு அங்கிருக்கின்ற மக்களுக்கு தங்குதடையின்றி பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீரை வழங்கிய அரசு அம்மாவினுடைய அரசு.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 43 ஆயிரத்து 505 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 61 கோடியே 82 லட்சம் ரூபாய் மகப்பேறு நிதியுதவியும் அம்மாவினுடைய அரசுதான் வழங்கியிருக்கிறது. முதலமைச்சருடைய விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 106 கோடியே 43 லட்சம் ரூபாய் அளவிற்கு 5540 பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில், தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் 2 லட்சம் ரூபாய் தான் சிகிச்சை பெறமுடியும். அதை அம்மாவினுடைய அரசும், மத்திய அரசும் இணைந்து இந்தத் திட்டத்தை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறது.

பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 39 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சூரிய சக்தித் திட்டத்துடன் கூடிய 1873 பசுமை வீடுகள் கட்டித் தந்திருக்கிறோம்.அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் 2017-2018-ம் ஆண்டில் மட்டும் 4,862 பயனாளிகளுக்கு நாங்கள் அம்மா இருசக்கர வாகனம் கொடுத்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, 4,868 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3,250 பேருக்கு நாங்கள் அம்மா இருசக்கர வாகனம் கொடுத்திருக்கிறோம். அதற்காக, 7 கோடியே 97 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டிருக்கின்றது. வங்கிக் கடன் இணைப்பு 36 ஆயிரத்து 866 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவியாக 1044 கோடியே 86 லட்சம் ரூபாய் இன்றைக்கு நம்முடைய மாவட்டத்தில் கொடுத்திருக்கிறோம்.

சேலம் நெடுஞ்சாலைக் கோட்டத்தின் மூலமாக 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக இரண்டடுக்கு மேம்பாலம் சேலம் ஐந்து ரோட்டில்தான் 320 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது. 93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆத்தூர் நகருக்கு புறவழிச்சாலை அமைக்கின்ற பணி நடைபெற இருக்கின்றது. திட்டங்களின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து கொண்டிருக்கிறது. அமைதியான முறையில் இந்த அரசு செயல்படுத்தும் திட்டங்களைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அவர்கள், அம்மாவின் அரசு செயல்படுத்தும் திட்டங்களினால் தாங்கள் அடைந்த பயன்களுக்காக தங்களது நன்றியை உரிய முறையில் தெரிவிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இதைக்கூறும் போது ஒரு கதை எனக்கு நினைவில் வருகின்றது. ஒரு காட்டில் தங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்க விலங்குகள் ஒன்றுகூடி ஆலோசித்தன. அப்பொழுது அங்கிருந்த புலி தன்னையே தலைவனாக தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொண்டது. புலியை தலைவராக ஏற்றுக்கொள்ள மற்ற மிருகங்கள் விரும்பவில்லை. எனக்கு எதிராக யார் வருகிறார்கள் என்று கேட்டது புலி. அப்பொழுது ஒரு யானை எழுந்து, புலிக்கு எதிராக போட்டியிட முன்வந்தது. உடனே மற்ற மிருகங்கள் புலிக்கும் யானைக்குமிடையே ஒரு போட்டியை வைத்தன. அதன்படி இந்தக் காட்டின் வடக்கே புலியும், தெற்கே யானையும் ஒரு வீடு கட்டவேண்டும். யார் அந்த வீட்டை மறுநாள் மாலைக்குள் கட்டி முடிக்கிறார்களோ அவர்களே அந்தக் காட்டின் தலைவன் என்று மிருகங்கள் அறிவித்தன. உடனே இரு மிருகங்களும் தங்கள் பணிகளை துவங்கின.

யானை தனது பணியை மெதுவாகவும், அமைதியாகவும் செய்து கொண்டிருந்தது. புலி வேகமாக தனது பணியை துவங்கியது. வீடு, பாதி அளவு வந்துவிட்டது. அந்த சமயம், யானை கட்டும் வீடு தரை மட்டத்திற்கு மேல்தான் வந்திருந்தது. இதை அறிந்த புலி, யானை மெதுவாகத்தான் செய்யும், வீடுகட்ட அனுமதிக்கப்பட்ட காலம் இன்னும் நிறைய இருப்பதால் நாம் விரைவில் முடித்து விடுவோம் என்று நினைத்து, சிறிதுநேரம் ஆட்டம், பாட்டங்களில் ஈடுபட்டது. ஆட்டத்தில் மெய்மறந்த புலி, வீடுகட்டுவதைப் பற்றி மறந்தே போயிற்று. யானை மெதுவாக பணிபுரிந்து வீட்டினை தனக்கு அளிக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் கட்டி முடித்தது. இதனை மற்ற மிருகங்களுக்கும் தெரிவித்தது.

அப்பொழுதுதான் புலிக்கு வீடுகட்டும் நினைவே வந்தது. புலி குறிப்பிட்ட காலத்திற்குள் வீடு கட்டாததால், யானையை காட்டின் தலைவனாக மற்ற மிருகங்கள் அறிவித்தன. ஆரவாரம் இல்லாத யானையிடம், அடாவடியான புலி தோற்றுப் போனது. யார் யானை? யார் புலி? என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

அம்மா வழியில் அரசு மக்கள் நலன் காக்கும் அரசு. மக்கள் குறையை நிவர்த்தி செய்து பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறது. நான் சட்டசபையில் 110 விதியின் கீழ் தலைவாசல் கூட்டுரோடு அருகிலே 900 ஏக்கர் பரப்பளவில் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தேன்.

இந்த பூங்கா அமைப்பதன் மூலமாக விவசாயிகள் மிகப் பெரிய அளவில் பயன்பெறுவார்கள். வேளாண் பெருமக்கள் உபதொழிலாக கால்நடைகளை வளர்க்கின்றார்கள். அவர்களுடைய வாழ்வு மலரவேண்டும், அவர்களுக்கு கூடுதலான வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கால்நடை பூங்காவை அமைக்க இருக்கின்றோம். மரபு திறன்மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளைக் கொண்டு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உறை விந்து உற்பத்தி மையம் அந்த வளாகத்திலே அமைக்கப்படும்.

நேற்றையதினம் (நேற்று முன்தினம்) பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்திருக்கின்றார். விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளினால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையை மாற்றி, சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுகின்ற விதமாக கிட்டத்தட்ட ஆண்டொன்றுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்து, முதற்கட்டமாக, 2000 ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கிலே செலுத்தப்படுகின்ற அந்த செய்தியைச் சொல்லி, அவர் தன்னுடைய திருக்கரங்களால் துவக்கி வைத்தார். தமிழகத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். இந்தியா முழுவதும் 12 கோடி சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.

இந்தத் திட்டம் தொடர்ந்து ஐந்தாண்டுகாலம், ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய், நான்கு மாதத்திற்கு ஒருமுறை 2000 ரூபாய் என்று மூன்று தவணையாக அந்த விவசாயிகளினுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அப்படி ஐந்தாண்டு காலத்தில் 30 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் சென்றடையும். எனவே, தமிழகத்திலுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டத்தை பாரதப் பிரதமர் அறிவித்திருக்கின்றார். அதற்காக, சிறு, குறு விவசாயிகள் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும், விவசாயிகள் சார்பாகவும், மனமார, உளமார நன்றியை பாரதப் பிரதமருக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

புரட்சித்தலைவி அம்மாவினுடைய அரசு இன்றைக்கு அனைத்து ஏழை தொழிலாளிகளுக்கும் சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை நான் வழங்கியிருக்கின்றேன். நிறைய பேர், அந்த சிறப்பு உதவி திட்டத்தில் எங்கள் பெயர் இடம்பெறவில்லை என்று என்னிடத்திலே கோரிக்கை மனு கொடுத்தார்கள்.

இங்கு வருகை தந்திருக்கின்ற அரசு கூடுதல் செயலாளர் மரியாதைக்குரிய ஹன்ஸ்ராஜ் வர்மா அவர்களிடத்திலும், மற்ற உயர் அதிகாரிகளிடத்திலும் எடுத்துச் சொல்லி, ஏழை குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளி எவரும் விடுபடாமல் அந்தக் கணக்கை எடுங்கள், அத்தனை ஏழை குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் அம்மாவினுடைய அரசால், சிறப்பு நிதி உதவித் திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் வழங்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். வேண்டுமென்றே சிலர், பாதி பேருக்குதான் கிடைக்கும், பாதி பேருக்கு கிடைக்காது என்று புரளியை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள், அதெல்லாம் தவறு. தகுதியான ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் விடுபடாமல் கணக்கெடுத்து இந்த 2000 ரூபாய் வழங்கப்படும்.

தைப் பொங்கல் அனைத்து இல்லங்களிலும் பொங்க வேண்டும் என்பதற்காக பொங்கல் தொகுப்புத் திட்டமாக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 1000 ரூபாய் வழங்கிய அரசு அம்மாவினுடைய அரசு. இந்த அரசு ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு. எழை மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவி அம்மா பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதன் அடிப்படையில், அம்மாவினுடைய அரசும் இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இன்றையதினம் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் சென்று, ஜமுக்காளத்தை விரித்துபோட்டு, அங்கிருக்கும் மக்களையெல்லாம் கூப்பிட்டு உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். இத்தனையும் நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சேலம் மாவட்டத்தில் 18,000 சுய உதவிக் குழுக்கள் இருக்கிறது. இன்றையதினம், 2,709 சுய உதவிக் குழுக்களுக்கு 157 கோடி ரூபாய் சுயஉதவிக்குழு கடனாக வழங்கப்பட்டு, சுயமாக தொழில் துவங்கக்கூடிய நிலையை உருவாக்கியிருக்கின்றோம்.

இதுவரை 18,000 சுய உதவிக் குழுக்கள் சேலம் மாவட்டத்தில் இருந்தாலும், ஏற்கனவே 500 கோடி ரூபாய் சுய உதவிக் குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுவிட்டது, எஞ்சியவர்களுக்கு இப்பொழுது 157 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறோம். இப்பொழுது சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்கள் விற்கப்பட்டு, பொருளாதாரம் ஈட்டக்கூடிய நிலையை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம். ஆகவே, நீங்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையே இல்லை. ஏனென்றால், எல்லா ஊருக்கும் நாங்கள் செய்திருக்கின்றோம்.

பாதுகாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக எல்லா கிராமங்களுக்கும் தண்ணீர் கொடுக்கின்றோம். தெருவிளக்கு வசதி, சாலை வசதி போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. சேலத்தில் எல்லா இடங்களிலும் பாலங்கள் கட்டிக் கொடுத்திருக்கின்றோம். சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ரெயில்வே கிராஸிங் முழுவதிலும் உயர்மட்டப் பாலம் கட்டப்பட்ட ஒரே மாவட்டம் நமது மாவட்டம். தங்குதடையில்லாமல், விபத்தில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு சிறப்பான சாலை வசதிகளை நம் தமிழ்நாடு முழுவதும் வழங்கியிருக்கின்றோம்.

மத்திய அரசின் மூலமாக, நம்முடைய மாநில சாலை, மாவட்டச் சாலை போன்றவற்றை தரம் உயர்த்த வேண்டும் என்பதற்காக 41 சாலைகளை தேர்வு செய்து, மைய அரசுக்கு அதைக் கொடுத்து, சுமார் 50 ஆயிரம் கோடி தமிழ்நாட்டிற்கு மட்டும் இந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு மட்டும், மைய அரசு வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு திட்டமும் நாங்கள் பார்த்து, பார்த்து வழங்கியிருக்கின்றோம். இன்றைக்கு இந்தியாவிலேயே உணவு தானிய உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றோம். நம் வேளாண் பெருமக்கள் நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். அதற்காக உயர்ந்த விருதான க்ரிஷ் கர்மான் விருதை தொடர்ந்து நாம் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.

வறட்சி வருகின்றபொழுது, வேளாண் பெருமக்களுக்குத் தேவையான நிவாரணத்தை அளிக்கின்றோம். புயல் வருகின்றபொழுது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கின்றோம். ஆகவே, எந்த வகையிலும் ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் அம்மவினுடைய அரசால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்பதை சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்வி சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது, இந்தியாவிலேயே கல்வியிலே முதன்மை மாநிலம் என்று சொன்னால் தமிழ்நாடு தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். அனைவருடைய குழந்தைகளும் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்விக்கு வேண்டிய அத்தனையும் அம்மாவினுடைய அரசு செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அங்கன்வாடிக்கு செல்கின்ற குழந்தைகளிலிருந்து, பள்ளிக்கு, கல்லூரிக்குச் செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் உதவித் திட்டம் கொடுக்கப்படுகின்றது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, காலணி, சீருடை, விலையில்லா புத்தகம், நோட்டு, அதைக் கொண்டு செல்வதற்கு பை, சைக்கிள், அறிவுபூர்வமான கல்வி கற்பதற்காக மடிக்கணினி, கல்வி ஊக்கத் தொகை அத்தனையும் கொடுத்த காரணத்தினால், தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கை 48.6 சதம் உயர்ந்திருக்கிறது. இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கையில் உயர்ந்த மாநிலம் தமிழ்நாடு தான்.

இதை எதற்காக சொல்கிறேனென்றால் இன்றைக்கு எதிக்கட்சித்தலைவர் செல்கின்ற இடத்திலெல்லாம், இந்த ஆட்சியில் ஒன்றும் நடைபெறவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார். அத்தனையும் பொய். அவர் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகாலம் துணை முதலமைச்சராக இருந்தார், உள்ளாட்சித் துறை மந்திரியாக இருந்தார், எத்தனை கிராமத்திற்கு சென்றார்? எத்தனை மக்களை பார்த்தார்? எத்தனை திட்டங்களை நிறைவேற்றினார்? ஒன்றுமே செய்யவில்லை. அதிகாரம் இருக்கும்பொழுதே மக்களுக்கு அந்தத் திட்டங்களை செய்யவில்லை. ஆ

னால் அம்மாவின் அரசு ஒவ்வொரு கிராமத்திற்கும் என்ன வேண்டும் என்பதை திட்டமிட்டு, செயல்படுத்தி, அந்த மக்களுக்குத் தேவையான திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றோம். அந்த வகையிலே, அம்மாவினுடைய அரசு கல்விக்குத்தான் அதிக நிதியை ஒதுக்கி, கல்வியிலே புரட்சி, மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மருத்துவத் துறையில் மிகப்பெரிய சாதனை. சேலத்தில் கூட 500 படுக்கைகள் கொண்ட மகப்பேறு மருத்துவமனை கட்டிக் கொடுத்திருக்கிறோம். அதில் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு சிகிச்சை முகாம் கொடுத்திருக்கிறோம். ஏழை தாய்மார்களின் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால், தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் அதிகம் செலவாகும் என்பதற்காக, புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்த காலத்திலே இங்கே பச்சிளங்குழந்தைகள் சிறப்பு சிகிச்சை முகாம், அரசு மோகன்குமாரமங்கலம் பொது மருத்துவமனையில் இயங்கி வருகின்றது.

கிராமத்திலே இருக்கும் மக்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கக்கூடிய அளவிற்கு சேலம் மாவட்டத்தில் நிறைய ஆரம்ப சுகாதார நிலையம் கொடுத்திருக்கின்றோம். ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தியிருக்கிறோம். நான் ஏற்கனவே சொன்னதைப்போல, இந்தியாவிலே, எத்தனை மாநிலங்கள், எத்தனை அரசு மருத்துவமனைகள், மிகப் பெரிய மாவட்ட மருத்துவமனைகள் இருக்கின்றன. எந்த மருத்துவமனையிலும் செயல்படுத்த முடியாத ஒரு திட்டத்தை நம்முடைய மருத்துவர்கள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள், மிகப் பெரிய வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு தொழிலாளி இரண்டு கையையும் இழந்த ஒருவருக்கு இரண்டு கையையும் பொருத்தவேண்டும் என்பதற்காக, அரசு மருத்துவர்களையெல்லாம் நான் அழைத்துப் பேசினேன். நம்முடைய ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நிச்சயம் இரண்டு கைகளையும் நாங்கள் பொருத்திக் காட்டுவோம் என்று என்னிடத்தில் தெரிவித்தது போல, அந்தத் தொழிலாளிக்கு, இறந்த ஒருவரின் உடலிலிருந்து இரண்டு கைகளையும் எடுத்து, அந்தத் தொழிலாளிக்கு பொருத்தி, இன்றைக்கு சிறப்பாக என்னிடத்திலே வந்து கை கொடுத்தார்.

இந்தியாவிலேயே எந்த அரசு மருத்துவமனையிலும் இப்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக இரண்டு கைகளையும் பொருத்தப்பட்ட வரலாற்றை நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்றால் மருத்துவத் துறை எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது, எந்த அளவிற்கு சேவை புரிந்திருக்கின்றது என்பதை நாம் அத்தனைபேரும் எண்ணிப் பார்க்க வேண்டும். சாதனை புரிந்த மருத்துவர்களுக்கு உங்கள் சார்பாக, எனது சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

50 ஆண்டுகால காவிரி நதிநீர் பிரச்சினையை அம்மாவினுடைய அரசுதான் தீர்த்தது. 50 ஆண்டுகால காவிரி நதிநீர் பிரச்சினையை உச்சநீதிமன்றத்தில் வாதாடி, சட்ட ரீதியாக நம் விவசாய பெருமக்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்த அரசு அம்மாவினுடைய அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே சிறப்பாக சட்டம், ஒழுங்கை பராமரிக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை பெற்றிருக்கிறோம்.

இந்தியா டுடே என்ற ஆங்கில நாளேடு செய்த சர்வேயில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருக்கின்ற முதல் மாநிலம் தமிழ்நாடு என்று தேர்ந்தெடுத்து, அதற்கான விருதை டெல்லியில் நம்முடைய குடியரசுத் தலைவர் மூலமாக விருதை வழங்கினார்கள். இப்படி பல்வேறு திட்டங்கள் வாயிலாக போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை, வேளாண்மைத் துறை என்று 16 விருதுகளை நாம் பெற்றிருக்கின்றோம். எல்லாத் துறைகளும் வளர்ந்து காணப்படுகிறது, எல்லாத் துறைகளிலும் விருதுகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.

நாட்டிலேயே தமிழகத்தை ஒரு முதல் மாநிலமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. உலக முதலீட்டாளர் மாநாட்டை கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக திட்டம் தீட்டி, இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, தொழில் முனைவோர்களைப் பார்த்து, தமிழகத்திற்கு தொழில் துவங்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்து, அதேபோல, வெளிநாட்டிலிருக்கின்ற பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள் எல்லாம் நம்முடைய தமிழகத்தின் தொழில் துறை அமைச்சர் சம்பத் நேரிலே அதிகாரிகளுடன் சென்று அவர்களை தமிழ்நாட்டிற்கு தொழில் செய்ய வாருங்கள், உங்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுப்போம் என்று அழைத்து, சென்னையில் நடத்தினோம், அவர்களும் அந்த அழைப்பை ஏற்று வந்தார்கள்.

சென்னையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டிலே கலந்துகொண்டு கிட்டத்தட்ட 3 லட்சத்து 431 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்த அரசு அம்மாவினுடைய அரசு. அதைப் பொறுக்க முடியாமல்தான் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ரோட்டில் போகிறவர்கள், வருபவர்களுக்கெல்லாம் பேண்ட், சூட் போட்டு அங்கே கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்கள் என்று கிண்டல் பேசிக் கொண்டிருக்கிறார். எந்தளவுக்கு தொழில் முதலீட்டாளர்களை கொச்சைப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு ஒரு தொழில்வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க இருக்கின்றோம்.

ஆகவே, இன்றைக்கு தொழில் தொடங்குவதற்காக Single Window System என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்து அத்தனை அனுமதியும் அளித்து வருகின்ற அரசு நம் அரசு. இப்படிப்பட்ட திட்டத்தை இன்றைக்கு இந்தியாவிலேயே நம்முடைய மாநிலம் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறதென்று இந்த நேரத்திலே தெரிவித்து, அம்மாவினுடைய அரசு உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு, மக்களுக்குத் தேவையான திட்டங்களை வழங்குவது அம்மாவினுடைய அரசு என்று கூறி சிறப்பான ஏற்பாடு செய்த இந்தத் துறையின் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.