தற்போதைய செய்திகள்

இந்தியாவிலேயே முதன் முறையாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுண்குழாய் மூலம் புதிய செயற்கை வால்வு பொருத்தும் சிகிச்சை – அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தகவல்…

சென்னை:-

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் நுண் குழாய் மூலம் இதய வால்வில் புதிய செயற்கை வால்வு பொருத்தும் சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை பாராட்டி சிகிச்சை பெற்ற பயனாளிகளை  கவுரவித்தார்.

அப்போது அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:- 

அம்மா அரசின் சீரிய முயற்சியால் இந்தியாவில் திறமையும் அனுபவமும் மிக்க Heart Team India அமைப்பைச் சார்ந்த இதய வால்வு மாற்று சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.பி. கோபாலமுருகனுடன் அரசு மருத்துவமனைகளில் அதிநவீன இருதய வால்வு மாற்று சிகிச்சை முறைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் கையெழுத்தானது. வயதானவர்களுக்கு சில சமயங்களில் இதய வால்வில் கால்சியம் அதிக அளவில் சேர்ந்து வால்வு பழுதடைந்து அல்லது சுருங்கி இரத்த ஓட்டம் தடைபடும். இதனால் மூச்சு திணறல், நெஞ்சுவலி, மயக்கம் ஏற்படலாம். தகுந்த சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதற்கான ஒரே சிகிச்சை பழுதடைந்த அல்லது சுருங்கிய வால்வை எடுத்து விட்டு புதிய செயற்கை வால்வை பொருத்துவதாக மட்டும் இருந்தது.

நீண்டகாலமாக இதயத்தை திறந்து அறுவை சிகிச்சை மூலம் நோயுற்ற சுருங்கிய இதய வால்வை எடுத்துவிட்டு அதற்கு மாற்றாக செயற்கை வால்வு பொருத்தப்பட்டு வந்தது. தற்போது புதிய முறையின் மூலம் இருதயத்தை திறக்காமல் இரத்த குழாய் வழியாக நுண் குழாய் மூலம் சுருங்கிய இதய வால்வில் புதிய செயற்கை வால்வு பொருத்தப்படுகிறது. ரூ.25 லட்சம் வரை செலவாகும் இச்சிகிச்சை (வால்வு மதிப்பு ரூ.20 லட்சம் + சிகிச்சைக்கான செலவு ரூ.5 லட்சம்) தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. தமிழகம் தான் இந்தியாவிலேயே முதன்முறையாக இச்சிகிச்சையினை அரசு மருத்துவமனையில் தொடங்கியது.

இந்த புதிய சிகிச்சை முறையானது அரசு மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன்முறையாக 16 நவம்பர் 2018 அன்று ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் வெற்றிகரமாக 2 நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிந்த இரண்டு நாட்களிலேயே நோயாளி வீட்டிற்கு திரும்பி சராசரி வாழ்க்கையை மீண்டும் தொடரலாம். இதன்படி இதய வால்வு மாற்று சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஏ.பி.கோபாலமுருகன், பிரஷாந்த் வைஜெயந்த் மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இருதயவியல் துறை தலைமை மருத்துவர் ஜி.கார்த்திகேயன் தலைமையிலான மருத்துவ குழுவினரால் நல்லசாமி (வயது 67), கரூர் மற்றும் சுப்புராம் (வயது 73), விருதுநகர் ஆகியோருக்கு முற்றிலும் கட்டணமில்லாமல் நுண் குழாய் மூலம் புதிய செயற்கை வால்வு பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமுடன் உள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக நிர்வாக இயக்குநர் உமாநாத், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு, ஹார்ட் டீம் இந்தியா இதய வால்வு மாற்று சிகிச்சை நிபுணர் கோபாலமுருகன், பிரஷாந்த் வைஜெயந்த், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இருதயவியல் துறை தலைமை மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.