இந்தியா மற்றவை

இந்தியாவில் 6 அணுஉலைகளை அமெரிக்கா ஏற்படுத்தித்தர உடன்பாடு…

இந்தியாவில் 6 அணு உலைகளை கட்டமைக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்தியாவில் 22 அணு உலைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 6780 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 4.1 சதவிகிதமாக அணு மின்னுற்பத்தி உள்ள நிலையில் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் இதன் மும்மடங்காக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மேலும்  ராஜஸ்தான், குஜராத்தின் காரக்பூர், கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இடங்களில் அணு உலைகள் கட்டுமானம் நடைபெற்று வருகிறது.  இதனிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவும், ரஷ்யாவும் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் இந்தியாவில் 6 அணு உலைகள் அமைக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்ட்ரியா தாம்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த இரு நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்தியாவில் அமெரிக்கா அணு உலைகளை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன் படி இந்தியாவில் அமெரிக்காவும் 6 அணு உலைகளை அமைப்பது என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவில் அணுமின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையிலும் 6 அணு மின் நிலையங்களை இந்தியாவில் அமெரிக்கா கட்டுவது என்று ஒப்பந்தம் கையெழுத்தானதாக, இரு நாடுகளும் விடுத்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் எந்தெந்த இடங்களில் அமெரிக்கா அணுமின் உலைகள் கட்ட உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இருந்த போதிலும், மகாராஷ்ட்ராவின் தாராப்பூர், ஜிட்டாபூர், ஆந்திராவின் கோவாடா, அரியானாவின் கோரக்பூர், மத்திய பிரதேசத்தின் சுட்கா, பிம்பூர், ராஜஸ்தானின் மகி பன்ஸ்வாரா, கர்நாடகத்தின் கைகா, தமிழகத்தின் கல்பாக்கம், மேற்கு வங்கம், மற்றும் குஜராத் ஆகியவற்றில் 11 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் வெஸ்டிங் ஹவுஸ் என்ற அணுமின் உலை கட்டுமான நிறுவனம் ஆந்திராவில் 6 அணு உலைகள் அமைக்க விருப்பம் தெரிவித்து இருந்தது. இதற்கு அந்நாட்டு மின்சாரத்துறை அமைச்சர் ரிக் பெரி ஆதரவு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.