கன்னியாகுமரி

இந்துக்களை இழிவாகப் பேசி வரும் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டுவோம் – தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பிரச்சாரம்…

கன்னியாகுமரி:-

இந்துக்களை இழிவாக பேசும் ஸ்டாலினுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பேசினார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகீருஷ்ணனை ஆதரித்து நாகர்கோவில் வடசேரி எம்.ஜி.ஆர். சிலை முன்பிருந்து திறந்த வேனில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி, கன்னியாகுமரி மாநகர மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மாநகர செயலாளர் சந்துரு, தே.மு.தி.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

இப்பிரச்சாரத்தின்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பேசியதாவது:-

5 ஆண்டுகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்துள்ளார். எந்த மாநிலத்தில் இல்லாத அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.40 ஆயிரம் கோடியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளன. நான்கு வழிச்சாலை, இரட்டை ரயில் பாதை, மார்த்தாண்டம், பார்வதிபுரம், சுசீந்திரம் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளன.

அண்மையில் பிரச்சாரத்துக்கு வந்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கழக தொண்டர்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். திட்டங்களை சொல்லி தான் நாம் வாக்கு சேகரிக்கிறோம். கடந்த சில தினங்களுக்கு முன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரதமரை பார்த்து சாடிஸ்ட் என்கிறார். இந்துக்களின் திருமணங்களை கேலியாக பேசுகிறார். இந்துக்களை இழிவுபடுத்தும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும், அந்த கட்சிக்கும் இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு இந்தியாவில் சாதனைகள் செய்துள்ள பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை நாம் வெற்றி பெற செய்ய வேண்டும். ராகுல்காந்தி பிரதமர் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டும் தான் பேசி வருகிறார். அவரும் இவரை முதலமைச்சர் என்கிறார். இந்தியாவின் பிரதமர் பதவிக்கு மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, மாயாவதி இப்படி அணிகள் பல இருக்கிறது. ஒரு பிரதமரை தான் தேர்வு செய்ய முடியும். அதுவும் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான தமிழகத்தில் இருந்து 40 தொகுதிகளில் வெற்றி பெறும் நாம் தான் பிரதமர் மோடியை தேர்வு செய்வோம்.

சிறுபான்மை, சிறுபான்மை என்று சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றும் ஸ்டாலினுக்கு தகுந்த பதிலடியை இந்த தேர்தலில் நீங்கள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.