தற்போதைய செய்திகள்

இனிமேல் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாது – அமைச்சர் பி.தங்கமணி உறுதி

நாமக்கல்:-

குடிமராமத்து திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் இனிமேல் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற புதிய வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டட திறப்பு விழாவில் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி பேசியதாவது:-

கூட்டுறவு வளர்ச்சி நிதியின் மூலமாக நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவரும் பழைய கூட்டுறவு கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் கட்டித்தரப்பட்டு வருகின்றது. கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்கடன், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பொருளாதார கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் மகளிர் சுய உதவிக்குழுவினர், விவசாயிகள், தொழில் முனைவோர், ஆடு மாடு வளர்ப்பு உட்பட கடன் பெறுபவர்கள் 98 சதவிகித கடனை உரிய காலத்தில் சரியாக திரும்ப செலுத்தி வருகின்றனர். இதனால் தான் வங்கிகளின் வாயிலாக நம் மாவட்டத்திற்கு தேவையான கடன்வசதி பெற முடிகிறது.

பெய்கின்ற மழைநீரை சேமிக்கும் வகையில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள ஏறத்தாழ 200 ஏரிகள் தூர்வாரப்பட்டு தற்போது ஏரிகள் நிரம்பியுள்ளன. அதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும், மேலும் கோடைகாலங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படாது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.