உலகச்செய்திகள்

இப்தார் விருந்தில் பாகிஸ்தான் வன்முறை- இந்திய தூதரகம் கடும் கண்டனம்..

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஓட்டலில் இந்திய தூதரகம் சார்பில் ரமலான் நோன்பினை முன்னிட்டு நேற்று இப்தார் விருந்து அளிக்கப்பட்டது.  இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  ஆனால் விருந்து நடந்த ஓட்டலை பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பினர் முற்றுகையிட்டு அங்கிருந்த விருந்தினர்களை துன்புறுத்தி, அவமரியாதை செய்துள்ளனர்.  அவர்களில் நூற்றுக்கணக்கானோரை திரும்பி போகவும் செய்துள்ளனர்.
இந்த விருந்து நடைபெறுவதற்கு முன், விருந்தினர்களை தொலைபேசியில் அழைத்து விருந்தில் பங்கேற்க கூடாது என மிரட்டியுள்ளனர்.  மீறி பங்கேற்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் அத்துமீறிய செயலுக்கு இந்திய தூதரகம் தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதுபற்றி பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, அவர்கள் தூதரக நடத்தைகளுக்கான அடிப்படை விதிகளை மீறி செயல்பட்டு உள்ளனர்.  நாகரீக அணுகுமுறையில் இருந்தும் விலகி உள்ளனர்.  இருதரப்பு உறவுகளுக்கு எதிராக அவர்கள் நடந்து கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
எங்களுடைய இப்தார் விருந்து நிகழ்ச்சியில் இருந்து கடுமையான முறையில் வெளியேற்றப்பட்ட விருந்தினர்கள் அனைவரிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.  இதுபோன்ற செயல்கள் ஆழ்ந்த வருத்தத்தினை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.