தமிழகம்

இயக்குனர் மகேந்திரன் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு – முதலமைச்சர் இரங்கல்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், ரசிகர் பெருமக்களால் “யதார்த்த சினிமாவின் இயக்குநர்” என வர்ணிக்கப்படும் மகேந்திரன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

அன்பும், எளிமையும் மிகுந்த மகேந்திரன் திரைத்துறையில் திரைக்கதை எழுத்தாளராக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் “முள்ளும் மலரும்” திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, “உதிரிப்பூக்கள்”, “ஜானி” உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய பெருமைக்குரியவர். இவர் இயக்கிய “நெஞ்சத்தை கிள்ளாதே” திரைப்படம் தேசிய விருதினை பெற்றது.

மகேந்திரன் இயக்குநராக மட்டுமின்றி, கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு போன்ற பல துறைகளிலும் தனது தனித்திறமையால் மிளிர்ந்தவர். திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். மகேந்திரன் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மகேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.