சிறப்பு செய்திகள்

இயல்பு வாழ்க்கை திரும்ப மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – முதலமைச்சர் பேச்சு

சென்னை

இயல்பு வாழ்க்கை திரும்ப மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வினை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரைக்கும் உணவு பஞ்சம் என்ற பிரச்சனையே எழவில்லை. அதேபோல அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக 1000 ரூபாய் வழங்கினோம். அவர்களுக்கு விலையில்லா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் கொடுத்தோம். மீண்டும் இரண்டாவது முறையாக ரூபாய் ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சுமார் 36 லட்சம் நபர்கள் இருக்கின்றார்கள். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து தங்கி தொழில் புரிந்து கொண்டிருந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற ரேஷன் பொருட்களை வழங்கினோம்.

தொழிலாளர்களுக்குத் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அனைத்து உதவிகளையும் அம்மாவுடைய அரசு செய்து கொடுத்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அம்மா உணவகத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு ஏழு லட்சம் நபர்களுக்கு வயிறார உணவு அளிக்கப்பட்டது. சமூக கிச்சன் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு, முதியோர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு நாள்தோறும் இரண்டு லட்சம் நபர்களுக்கு உணவளித்து கொண்டிருக்கின்றோம். யார் யாருக்கெல்லாம் உணவு வேண்டும் என்று கேட்டார்களோ அவர்களுக்கு எல்லாம் அரசு முன்வந்து உணவளித்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல வேளாண் பணிகளை பொறுத்தவரை எவ்வித தடையும் கிடையாது. முழுமையாக வேளாண் பணிகளை மேற்கொள்ளலாம் என்று அரசு அறிவித்து அந்தப் பணிகள் தொய்வின்றி தமிழகம் முழுவதும் நடைபெற்று கொண்டிருக் கின்றது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை வைத்து கிராமங்களில் அந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு அதையும் இன்றைக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி, நகரப் பகுதியை தவிர்த்து ஊரகப் பகுதிகளில் இருக்கின்ற தொழிற்சாலைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளர்களை வைத்து இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு, அந்த தொழிற்சாலைகளும் திறக்கப்பட்டு தற்போது இயங்கி வருகின்றன. உணவு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் ஏற்கனவே திறக்கலாம் என்று அரசு உத்தரவு வழங்கி, அவைகள் திறக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிறு, குறு தொழில்கள் தடையில்லாமல் இயங்குவதற்கும் அரசு துணை நின்றிருக்கிறது. அவர்களும் ஊரகப் பகுதிகளில் திறந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு அவைகளும் திறக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல, ஏற்றுமதியாளர்கள் எங்களுக்கு வெளிநாடுகளுக்கு மாதிரி அனுப்ப வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். அதையும் அரசு பரிசீலித்து, அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றது. நீங்கள் நேரடியாக சென்று அந்த மாதிரி தயாரிக்கின்ற தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்பு இருந்தால், குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வைத்து அந்த மாதிரியை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலே, மாவட்ட ஆட்சித் தலைவர்களும் யார் யாரெல்லாம் இந்த மாதிரி தயாரிக்கின்ற பணியிலே ஈடுபட்டிருக்கின்றார்களோ அந்த தொழிற்சாலைகளுக்கு சென்று பார்வையிட்டு அதற்கு அனுமதி தந்திருக்கின்றார்கள்.

ஆகவே அரசை பொறுத்தவரைக்கும், நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பித்திருந்தாலும் மக்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அரசு செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இவற்றிற்கெல்லாம் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் துணைநின்று வேகமாக, துரிதமாக செயல்பட்ட காரணத்தினாலே, இன்றைக்கு மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப்பெற்று, அரசால் அறிவிக்கப்பட்ட தொழில்களும் இன்றைக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன். பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும். எந்த அளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குகின்றார்களோ, அந்த அளவிற்கு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம்.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.