சிறப்பு செய்திகள்

இரட்டைஇலை சின்னம் அ.இ.அ.தி.மு.க.வுக்கே – டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

புதுடெல்லி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அண்ணா தி.மு.க.வுக்கு தான் இரட்டைஇலை சின்னம் என்று டெல்லி உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. டிடிவி. தினகரன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அண்ணா தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து, சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல்கள் மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வக்கீல்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன், கவுதம் குமார், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜரானார்கள்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் கடந்த 8-ந்தேதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம்  வழங்கியது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அண்ணா தி.மு.க.வுக்கு தான் இரட்டை இலை சின்னம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கேள்விபட்டதும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.

டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான உடனேயே தமிழகம் முழுவதும் உள்ள கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இரட்ைடஇலை சின்ன 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் முடக்கப்பட்டது. பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இரட்டைஇலை சின்னம் 2017 நவம்பர் 23-ம்தேதி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதை எதிர்த்து டி.டி.வி.தினகரனும் சசிகலாவும், தனித்தனியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தான்  டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.