தற்போதைய செய்திகள்

இரட்டைஇலை சின்னம் இருக்கும் வரை கழகத்தை யாராலும் வெல்ல முடியாது – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முழக்கம்…

விருதுநகர்:-

இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை கழகத்தை யாராலும் வெல்ல முடியாது என்று சாத்தூர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பாக நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராதாகிருஷ்ணன் எம்பி, சந்திரபிரபா எம்.எல்.ஏ., தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ரங்கநாதன், சுப்பையா பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

தமிழக மக்களுக்காக மறைந்த முதலமைச்சர் அம்மா ஏராளமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார். சென்ற இடம் எல்லாம் அம்மாவுக்கு சிறப்பான பெயர் உண்டு. அந்த அளவிற்கு நாடு போற்றும் திட்டங்களை அம்மா வகுத்து கொடுத்தார். அம்மா அமைத்து கொடுத்த ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர்.

அம்மா இல்லாத குறையை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி போக்கி கொண்டு இருக்கிறார். ஏழை எளிய மக்களின் நாடி துடிப்பு அறிந்து அவர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்கு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கும் விதமாக அதிகாரிகள் வீடு வீடாக நேரடியாக சென்று ஆய்வு நடத்த உள்ளார்கள். தகுதியுள்ள பயனாளிகளுக்கு கண்டிப்பாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் அம்மா தான் அதிகமாக அழைத்து பேசி ஆலோசனை வழங்கினார். ஏழைகள் எல்லாம் வசதி படைத்தவர்களாக மாறும் அளவிற்கு எடப்பாடி கே.பழனிசாமி நல்லாட்சி புரிந்து வருகிறார். ஒரு எளிமையான முதலமைச்சரை தமிழகம் இன்று பெற்றுள்ளது.

கழக ஆட்சியில் சாத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. அரசு கலைக்கல்லூரி, இருக்கன்குடி கூட்டு குடிநீர் திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், வைப்பாற்றில் மேம்பாலம், சாத்தூரை தலைமையிடமாகக் கொண்டு தனி கோட்டாட்சியர் அலுவலகம், வெம்பக்கோட்டைக்கு புதிய தாலுகா அலுவலகம். சாத்தூர் மெயின்ரோடு விரிவாக்கம், சாத்தூரில் புதிய ஐடிஐ, சாத்தூரில் புதிய வட்டாட்சியர், அலுவலகம், புதிய நீதிமன்றம் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கழக ஆட்சியில்தான் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

கழக ஆட்சி கலைந்து விடும் என்று தொடர்ந்து கூறியவர்களுக்கு திட்டங்கள் மூலம் முதல்வர் பதில் கூறியுள்ளார். இன்று வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த ஆட்சியில் எந்த குறையும் கிடையாது.புதிய பஸ்கள், புதிய சாலைகள், பாலங்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் நிதி உதவிகள் என கழக ஆட்சியில் மக்கள் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஜாதி சண்டைகள், மத கலவரங்கள் எதுவும் இல்லை. எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். தமிழகம் இன்று அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக திகழ்ந்து வருகின்றது. ஆவின் பால் இன்று உலக அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை நடைபெற்று வருகின்றது. ஆவின்பால் தரமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

அம்மாவின் இறப்பிற்கு காரணமாக இருந்த ஸ்டாலின் இன்று அம்மா நல்லவர் என்று பேசி நடிக்கின்றார். திமுக போட்ட பொய் வழக்குகள் அம்மாவின் உடல்நல குறைவிற்கு காரணமாக அமைந்தது. கழக தொண்டனை யாராலும் ஏமாற்ற முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்காக கழகம் தலைமையில் மாபெரும் வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் 21 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் மாபெரும் வெற்றிபெறும். எங்களிடம் இரட்டை இலை சின்னம் உள்ளது. இரட்டை இலை சின்னம் இருக்கும்வரை கழகத்தின் வெற்றியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. ராமர் இருக்கும் இடம்தான் அயோத்தி என்பதை போல இரட்டை இலை சின்னம் இருக்கும் இடத்தில்தான் கழக தொண்டா்கள் இருப்பார்கள். இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்று இரட்டை இலைக்கு துரோகம் செய்பவர்களைஅவர்களது நிழல்கூட மன்னிக்காது.

அண்ணா திமுக தொண்டன் வியர்வையால் பெற்ற வெற்றியை விலைக்கு விற்றவர்களை இந்த நாடு மன்னிக்காது. இந்த நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். கழக ஆட்சி பற்றி பொய்யான குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறி வருகின்றார். புதிய கட்சிகளால் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது. சும்மா தேர்தலில் வேண்டுமானால் நின்று கொள்ளலாம். அவர்களுக்கு பொதுமக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். எங்கள் வாக்குகளை எந்த கட்சியாலும் பிரிக்க முடியாது. ஏழைகளின் வயிற்றை பார்த்து தொடங்கப்பட்ட அஇஅதிமுக இயக்கம் 100ஆண்டுகள் வாழும். தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். இந்த மண் உள்ளளவும் இந்த விண் உள்ளளவும் எம்ஜிஆர், அம்மாவின் புகழ் இருக்கும். இரட்டை இலை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். இரட்டை இலை எங்கு இருக்கின்றதோ அங்குதான் அதற்கு மரியாதை என்று சிலர் கூறுகின்றனர். இளையதலைமுறையினர் கழகத்திற்கு அதிகமாக வருகின்றனர்.

சாத்தூர் தொகுதியில் அனைத்து தொகுதிகளிலும் சாலைகளை புதுப்பித்து வருகின்றோம். அண்ணா திமுக அறிவிக்கும் வேட்பாளரை சாத்தூர் தொகுதி மக்கள் மாபெரும் வெற்றிபெறச் செய்ய வைக்க வேண்டும். மோடி நாட்டின் சிறந்த தலைவராக செயல் ஆற்றி வருகிறார். இந்தியாவை வல்லரசாக ஆக்க திட்டம் தீட்டி செயல்பட்டு வருகின்றார். நாட்டில் நல்லாட்சி அமைய வேண்டும் என்றுதான் கூட்டணியில் பா.ஜ.க.வை சேர்த்துள்ளோம். 22 கட்சிகள் ஒன்று சேர்ந்து மோடியை எதிர்க்கின்றனர். 22 கட்சியில் யார் பிரதமர் என்று அறிவித்து தேர்தலை சந்திக்க முடியுமா. பிரதமர் பதவிக்கு எதிர்கூட்டணியில் மல்லுக்கட்டு நடைபெறுகிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி முதல் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவராக மோடி உள்ளார். சாத்தூர் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். சாத்தூர் தொகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

முன்னதாக 1270 நபர்களுக்கு வேஷ்டி, சேலைகள், மகளிருக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் 50 சலவை தொழிலாளர்களுக்கு சலவைப் பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.