சிறப்பு செய்திகள்

இரட்டை இலை சின்னம் கழகத்திற்கே சொந்தம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசிகள் என்றும் எடப்பாடியாருக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்குமே உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் உச்சநீதிமன்றம்  அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இரட்டை இலை சின்னம் கழகத்திற்கே உரியது என்று டெல்லி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. கழகத்தில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி.தினகரன் தங்களுடைய அணி தான் உண்மையான அ.இ.அ.தி.மு.க. என்று கூறி இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்று பிரச்சினை எழுந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அதைத்தொடர்ந்து எடப்பாடியாரும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்து கழகத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கழகத்தின் தலைமை பொறுப்பை ஏற்றார்கள். பொதுச்செயலாளர் பதவி இல்லாமல் ஒருங்கிணைப்பாளர்கள் என்ற பதவியை உருவாக்கி அதன்படி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமியும், ஆர்.வைத்திலிங்கமும் தேர்வு செய்யப்பட்டனர். கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் கழகத்தை இயக்குவது என்று அப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது கழகத்துக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. டி.டிவி.தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலைசின்னத்தை தங்கள் அணிக்கு வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் மீது சமீபத்தில் தான் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை ஒருங்கிணைப்பாளர்களாக கொண்டு இயங்கும் கழகத்திற்கே சொந்தம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அப்போது தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மீ்ண்டும் டி.டி.வி.தினகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தாங்கள் தான் உண்மையான அ.இ.அ.தி.மு.க. என்றும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் தினகரன் தனது சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் மீது நிரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகிய 3 நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் நேற்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. அதன்படி இரட்டை இலை சின்னம் எடப்பாடியார், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இயங்குவதே உண்மையான அ.இ.அ.தி.மு.க. என்றும், எனவே இரட்டை இலை சின்னம் அவர்கள் தலைமையில் இயங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கே சொந்தம் என்றும் உத்தரவை பிறப்பித்தது. டி.டி.வி.தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தர்மத்திற்கும், நியாயத்திற்கும், நேர்மைக்கும் கிடைத்த வெற்றியாகும். உண்மையான அ.இ.அ.தி.மு.க. கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் இயங்குவது தான் என்பது மீண்டும் நிரூபணமாகி விட்டது. உச்சநீதிமன்ற உத்தரவு வெளியான தகவல் கிடைத்ததும் தமிழகம் முழுவதும் உள்ள கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற இருக்கின்ற இந்த நேரத்தில் இரட்டை இலை சின்னம் கழகத்திற்கே உரியது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.