தற்போதைய செய்திகள்

இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கடும் தாக்கு…

திண்டுக்கல்

மக்களை ஏமாற்ற ஸ்டாலின் இரட்டைவேடம் போடுகிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.

கழக அமைப்பு செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் 3 ஆயிரம் பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது அனைத்து தலைவர்களையும் ஸ்டாலின் வரவழைத்தார். அக்கூட்டத்தில் ராகுல் தான் அடுத்த பிரதமர் என்றார். அதனை மற்ற தலைவர்கள் ஏற்க வில்லை. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி கூட்டிய சர்வகட்சி கூட்டத்தில் ராகுலைப் பற்றி ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் இரட்டை வேடம் போடுகின்றார்.

பா.ம.க., கழகத்துடன் கூட்டணி அமைத்ததையடுத்து ஸ்டாலின் முகத்தில் ஈயாட வில்லை. பணத்திற்காக ராமதாஸ் கூட்டணி அமைத்துள்ளார் என்கிறார். தி.மு.க., பா.ம.க.வுடன் கூட்டணி பேசி வந்தனர். அவர்கள்; தி.மு.க. கூட்டணிக்கு வருவார்கள் என நினைத்து ஏமாந்து விரக்தியில் ஸ்டாலின் பேசி வருகின்றார். தி.மு.க. மிகவும் பலவீனமாகப் போய் கொண்டிருக்கிறது.

40 தொகுதிகளிலும் அவர்களுக்கு தோல்வியே கிடைக்கும். திருவாருர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்கு தடை வாங்கியவர்கள் தி.மு.க.வினர் தான். உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் செய்தவரும் ஸ்டாலின் தான். இன்று ஒன்றும் தெரியாத அப்பாவி போல் நீலிக் கண்ணீர் விடுகின்றார். கழக அரசு பொங்கல் பரிசு வழங்கியதால் அரசுக்கு மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. இதை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக கிராமம் கிராமமாக சென்று மக்களை ஏமாற்றி வருகின்றார்.

தினகரனை நம்பி சென்ற எம்.எல்.ஏக்கள் பதவி இழந்து போய் உள்ளனர். தினகரனின் பேச்சே இல்லாமல் போய் விட்டது. இரட்டை இலை எங்களுக்கு தான் என்றார். ஆனால் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழகத்திற்கு தான் இரட்டை இலை கிடைத்து விட்டது. அவருக்கு குக்கர், தொப்பி சின்னம் கூட கிடைக்காமல் போய் விட்டது.

பிரதமர் மோடி அகில உலக நாடுகளுக்கும் சென்று இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி வருகின்றார். தமிழகத்திற்காக பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை, 6 வழிச் சாலை, பசுமை வீடுகள் திட்டம், சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் என பல்வேறு திட்டங்களை வழங்கி தமிழக மக்களின் காவலனாக மோடி உள்ளார். மக்களின் எண்ணத்திறகு ஏற்றாற்போலவும் மக்களுக்காகவும் ஆட்சி புரிந்து வருபவர்கள் தான் முதல்வரும், துணை முதல்வரும். தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளனர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மாவிற்கு ஆதரவு அளித்தது போல தமிழக மக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் பேராதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.