மதுரை

இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையும் – வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி

மதுரை

இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடையும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.எ. கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், அக்பர் அலி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் நாகலட்சுமி பலராமன், வட்ட செயலாளர்கள் பொன்.முருகன், என்.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ள 106 கிளைகளிலும், மேலூர் ஒன்றிய ஒன்றியத்தில் உள்ள 233 கிளைகளிலும், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 197 கிளைகளிலும், மதுரை கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 195 கிளைகளிலும், மதுரை மேற்கு ஒன்றியத்தில் உள்ள 95 கிளைகளிலும் ஆகமொத்தம் 826 கிளை கழங்களிலும், மாநகராட்சி பகுதியில் உள்ள 28 வார்டு பகுதிகளிலும் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

திமுக- காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இக்கூட்டணி மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ளாத பொருந்தாத கூட்டணி. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் கூட டெல்லியில் தோல்வியாக தான் உள்ளது. எதிர்மறையான திமுக- காங்கிரஸ் கூட்டணியை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
வரும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.