சிறப்பு செய்திகள்

இலங்கை சிறையில் வாடும் 46 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை – பிரதமருக்கு, முதலமைச்சர் வலியுறுத்தல்…

சென்னை:-

இலங்கை சிறையில் 46 தமிழக மீனவர்கள் எவ்வித முகாந்திரமுமின்றி அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 26 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளன. எனவே சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:-

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 9.2.2019 அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை அன்று அதிகாலை அவர்களை கைது செய்து திரிகோணமலையில் உள்ள சிறையில் அடைத்து வைத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோடடை, நாகப்பட்டினம் முதலிய மாவட்டங்களை சேர்ந்த 42 மீனவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சிறைகளில் உள்ளதால் அவர்களுடைய குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாக் சலஜந்தியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இதுபற்றி தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 26 படகுகளை பறிமுதல் செய்து நீண்டகாலமாக இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கேயே மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தாங்கள் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் இலங்கை சிறைகளில் உள்ள 46 தமிழக மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 26 மீன்பிடி படகுகளையும், உடனடியாக விடுவிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.