தற்போதைய செய்திகள்

இலவு காத்த கிளி மு.க.ஸ்டாலின் – தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு…

மதுரை:-

இலவு காத்த கிளியாக மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவிக்காக கனவு காண்கிறார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருப்பரங்குன்றம் தொகுதி கழக வேட்பாளர் எஸ் முனியாண்டியை ஆதரித்து ஹார்விபட்டியில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் ஏற்பாட்டில் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இது ஒரு வெற்றி கூட்டணியாகும். இதயதெய்வம் அம்மா அவர்களின் முழு ஆசீர்வாதம் இந்த கூட்டணிக்கு தான் உண்டு. நல்ல திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கியவர் இதயதெய்வம் அம்மா அவர்கள் தான். ஏனென்றால் மருத்துவமனையில் பிறந்த வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தைக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் போது அதை பார்த்து ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் ஏங்குவார்கள். அந்த ஏற்றத் தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது என்பதற்காக அம்மா அவர்கள் பிறந்த குழந்தைக்கு பரிசு பொருட்கள் வழங்கி ஆரம்பத்திலேயே ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு நிலையினை உருவாக்கினார். இது போன்ற எண்ணம் யாருக்கு வரும். தன்னலமற்ற தலைவருக்கு தான் வரும்.

10 ஆண்டுகாலம் இதயதெய்வம் அம்மா அவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் நான் நினைத்திருந்தால் முதல்வராய் இருப்பேன் என்று இப்போது கூறுகிறார். திமுகவுடன் ரகசிய உறவு வைத்துள்ள டிடிவி தினகரனை அம்மாவின் ஆன்மா நிச்சயமாக மன்னிக்காது. இலவு காத்த கிளி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது வேறு யாருமல்ல மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராக வேண்டும் என்ற கனவோடு தினமும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். இறுதியில் வழக்கம்போல் சட்டையை கிழித்துக் கொண்டு ஓட போகிறார்.

ஊரிலே வேலை இல்லாதவர்கள் திண்ணையிலே உட்கார்ந்து எதையாவது பேசி கொண்டிருப்பார்கள். அதுபோல் ஸ்டாலின் போது திண்ணை பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார் எதையாவது சொல்லி எல்லாரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கிறார் . நமது நாட்டின் பாதுகாவலராக மோடி திகழ்கிறார். இதனை எதிர்கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கூட்டணி வேட்பாளர் எஸ்.முனியாண்டி மாபெரும் வெற்றி பெறுவார். இது உறுதி.

இவ்வாறு தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.