தற்போதைய செய்திகள்

இலவு காத்த கிளி ஸ்டாலின் – பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு…

கன்னியாகுமரி:-

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

8 வழிச் சாலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்றாற்போல் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். ராகுல்காந்தி பிரதமரானவுடன் அ.இ.அ.தி.மு.க. அரசு கலையும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவரது செயல் இலவு காத்த கிளி போல உள்ளது.கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1999-ம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் நான் பெற்ற ஊதியம் மற்றும் அலவன்ஸ் பணத்தை மக்களுக்காக செலவிட்டுள்ளேன். 2014-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் பெற்ற 50 ஆயிரம் ரூபாய் ஊதியத்தை ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்காக வழங்கியேுள்ளேன். இந்த தேர்தலில் நான் யாரையும் போட்டியாக கருதவில்லை. குமரி மாவட்ட மக்கள் என்னை வேலைக்காரனாக பார்ப்பதால் நிச்சயம் தேர்வு செய்வார்கள்.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.