மற்றவை

தரம் குறைவான சமையல் எண்ணெய் விற்பனை செய்த நிறுவனங்களுக்கு ரூ.11,50,000 அபராதம்

உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் பெ.அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உணவுப் பொருட்களின் கலப்படத்தை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இத்துறையின் மூலமாக உணவு பாதுகாப்பு சட்டம் சிறந்த முறையில் அமுலாக்கப்பட்டு மற்றும் பொதுமக்களுக்கும், உணவு வணிகர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் ஒரு பொதுநல வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் சமையல் எண்ணெயில் கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று ஆணையிட்டது. அந்த ஆணையின் பேரில் சமையல் எண்ணெயில் கலப்படங்களை தடுக்க மாநில அளவில் ஒரு குழு உணவு பாதுகாப்புத்துறை ஆணையரால் அமைக்கப்பட்டது. இக்குழுவின் மூலம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் உற்பத்தி செய்வோருக்கான வழிமுறைகள், தயாரிக்கப்பட்டு அனைத்து நியமன அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் எண்ணெய் உற்பத்தியாளர் மற்றும் செய்வோருக்கான கூட்டங்கள் நடத்தப்பட்டு எண்ணெய் உற்பத்தி செய்வோருக்கான வழிமுறைகள் மற்றும் லேபிள் பற்றிய விழிப்புணர்வும், வழிகாட்டுதலும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த 09.12.2017 அன்று ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினரால் இடையன்காட்டு வலசு பகுதியில் திடீர் ஆய்வு நடத்தப்பட்ட போது ஒரே நிறுவனத்தில் 16 விதமான பிராண்டுகளில் எண்ணெய் பேக் செய்து, போலியான முகவரியுடன், உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் தரம் குறைவான எண்ணெய் டின்/ பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.

16 போலி நிறுவனங்கள்

1. கவர்னர் ரீபைண்டு கடலை எண்ணெய்
2. பொன்மயில் நல்லெண்ணெய்
3. முல்லை கடலை எண்ணெய்
4. மணிலா கோல்டு சமையல் எண்ணெய்
5. ஜி-கோல்டு கடலை எண்ணெய்
6. சூ ரிச் ரீபைண்டு சூரியகாந்தி எண்ணெய்
7. குறிஞ்சி கடலை எண்ணெய்
8. நேச்சுரல் தேங்காய் எண்ணெய் (டின்)
9. ரீ ரா தேங்காய் எண்ணெய்
10. கோல்ட்ஸ் “சூ” வெள்ளை ரீபைண்டு சூரியகாந்தி எண்ணெய்
11. எஸ்.எம்.எஸ் தேங்காய் எண்ணெய்
12. கோல்ட்ஸ் “சூ” வெள்ளை ரீபைண்டு சூரியகாந்தி எண்ணெய்
13. கவர்னர் கோல்டு சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய்
14. கவர்னர் கோல்டு கடலை எண்ணெய்
15. ஸ்ரீ குரு நல்லெண்ணெய்
16. நேச்சுரல் தேங்காய் எண்ணெய்
எனவே, அங்கிருந்த மேற்படி 16,950 லிட்டர் எண்ணெய் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டு, அவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. மேற்படி எண்ணெய் வகைகள் பரிசோதனைக்காக உணவுப் பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு, மேற்படி எண்ணெய் வகைகள் அனைத்தும்
1. தரம் குறைவானது என்றும்
2. முழுமையான லேபிள் விவரங்கள் இல்லாதது என்றும்
3. போலி முகவரி மற்றும் தவறான விளம்பரங்களுடன் விற்பனை செய்யப்பட்டது என்றும் உணவு பகுப்பாய்வு கூட பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.அதன்படி, மேற்படி நிறுவனம் மீது மாவட்ட கூடுதல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் முன்பு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையில் தரம் குறைந்த உணவு எண்ணெயினை போலி முகவரியுடன் மற்றும் தவறான விளம்பரங்களுடன் தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.11,50,000/- (ரூபாய் பதினோரு லட்சத்து ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்பட்டு மேற்படி அபராதத் தொகை அந்நிறுவனத்தால் செலுத்தப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய் வணிகம் செய்பவர்கள் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளின் லேபிளில் உரிமம் / பதிவு எண், உணவின்பெயர், உற்பத்தியாளர் பெயர் முழு முகவரி, பேக் செய்யப்பட்ட தேதி, நிகர எடை, பயன்படுத்தக்கூடிய தேதி/காலாவதி தேதி, ஊட்டச்சத்து விபரம், உணவு சேர்க்கைகளின் அறிவிப்பு/அளவு, எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது, சைவ (அ) அசைவ குறியீடு, உணவு பொருள்களுக்கு லாட்/கோடு/பேட்ச் எண் முதலியவை அச்சிட வேண்டும்.

தொடர்பு எண்
எனவே, உணவு பாதுகாப்புத்துறை விதிமுறைகளின் படி உணவு தயாரிக்க பயன்படுத்தும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் மற்றும் இதர எண்ணெய்களை விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், எண்ணெய் குறித்த திடீர் ஆய்வுகள் அனைத்து மாவட்டத்திலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமான புகார்கள் இருந்தால் 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.