சிறப்பு செய்திகள்

ஈழத்தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த ராஜபக்சேவின் கைக்கூலி தி.மு.க – துணை முதலமைச்சர் கடும் தாக்கு…

காஞ்சிபுரம்:-

இலங்கை போரின் போது ஈழத்தமிழர்களை கொத்துகொத்தாக கொன்று குவித்த ராஜபக்சேவின் கைக்கூலிகள் தி.மு.க. என்று தேர்தல் பிரச்சாரத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் எம்.பி., திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், திருப்போரூர் பேருந்து நிலையம், செய்யூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

இக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

அம்மாவின் அருளாசியோடு காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளராக மரகதம் குமரவேல் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளராக திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் கழகத்தின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இங்கிருக்கும் அடிப்படை தேவைகளை நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் கொண்டு சென்று இவர்கள் சிறப்பாக நிறைவேற்றுவார்கள் என்று இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நாட்டு மக்களுக்கு நல்ல பல திட்டங்களை அளித்திருக்கின்றார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை ஆகியவற்றை சிறப்பாக அளிக்கும் அரசாக அம்மாவின் வழியில் செயல்படும் கழக அரசு செயல்படுகிறது. ஆனால் திமுக ஆண்ட காலத்திலும், திமுக காங்கிரஸ் ஆண்ட காலத்திலும் என்னென்ன பிரச்சனைகள் வந்தது. அவற்றையெல்லாம் தீர்க்கின்ற அரசாக எந்த அரசு விளங்கி இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

காவேரி பிரச்சனை, தமிழகத்தின் ஜீவாதாரமான பிரச்சுனை. தஞ்சை தரணி மக்களுக்கு ஊறு விளைவிக்கின்ற வகையிலே வந்தது தான் காவேரி பிரச்சனை. தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் வந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடுவர்மன்றம் நிறுவப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தது. 2007 ஆம் ஆண்டில் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்தபோது தமிழகத்தின் முதலமைச்சராக கருணாநிதி இருந்தார்.

டெல்லியில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அப்போது அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் “நீங்கள் தமிழகத்தின் முதலமைச்சர். உங்களது கட்சியைச் சார்ந்த 9 பேர் மத்தியில் அமைச்சர்களாக இருக்கின்றார்கள். 17 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்துள்ளது. அந்த காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு மத்திய அரசு அரசிதழிலே வெளியிட நீங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் கருணாநிதி அதை பொருட்படுத்தவில்லை. அம்மா அவர்கள் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எதுவும் நடக்கவில்லை. அதனால் அம்மா அவர்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று சட்டப்போராட்டம் நடத்தி நீநிமன்றம் மூலம் அரசாணை பெற்று அரசிதழில் வெளியிட வைத்தார். இதனை செயல்படுத்த முடியாத கையாலாகாத அரசாக காங்கிரஸ் திமுக அரசு இருந்துள்ளது. அப்போது அம்மா சொன்னார் “என்னுடைய 33 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் மிகவும் சந்தோசம் அடைந்தது காவேரி நடுவர்மன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்ட போது தான்” என்றார். நம்முடைய தஞ்சை தரணியை பாலைவனமாக்க கூடாது என்று வாதாடி போராடி உச்சநீதிமன்றம் மூலம் அரசாணை பெற்று தந்த ஒரே தலைவி புரட்சி தலைவி அம்மா அவர்கள் தான்.

கழக ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன. அதில் திருப்போரூர் தொகுதியில் மட்டும் அரசு பள்ளியில் படிக்கும் 19 ஆயிரத்து 610 மாணவ, மாணவிகளுக்கு சுமார் 28 கோடி மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 8 ஆயிரத்து 30 மாணவ, மாணவிகளுக்கு 3.14 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 19 ஆயிரத்து 610 மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிப்பதற்காக 28 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் ஊரக வளர்ச்சி திட்டத்தின் மூலம் 1641 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7121 பணிகள் நடைபெற்றுள்ளன.

நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடன் கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் எல்லாம் தர்மத்தின் பக்கம் இருக்கின்ற கட்சிகள். தி.மு.க. பக்கம் இருக்கின்ற கட்சிகள் எல்லாம் அதர்மத்தின் பக்கம் இருக்கின்ற கட்சிகள். இந்திய திருநாட்டை 5 ஆண்டுகாலம் நல்லமுறையில் சிறப்பான ஆட்சியை அளித்து வருகின்றார் பிரதமர் நரேந்திர மோடி. சிறுபான்மை மக்களை பாதுகாத்து அமைதி பூங்காவாக இந்தியாவை விளங்க வைத்துள்ளார் பிரதமர் நரேந்திரமோடி.

இத்தகைய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் அண்டைநாடு ஈடுபட்டதை நீங்கள் அறிவீர்கள். இதனால் 45 வீரர்கள் உயிரிழந்தார்கள். இதற்கு தக்க பதிலடி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால்தான் கொடுக்க முடிந்தது. ஆக உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் எந்த பிரச்சினையானாலும் சமாளிக்கும் வல்லமை பெற்றவர் பிரதமர் நரேந்திர மோடி. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இல்லை. தற்போது தமிழகத்தில் சுமார் 1300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி ஆட்சி தமிழகத்தில் 10 ஆண்டுகள் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு வரிப்பணம் சென்றது. ஆனால் அவர்கள் தொலைநோக்கு திட்டங்கள் ஏதும் தமிழகத்தில் கொண்டுவரவில்லை. ஆனால் இன்று மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு அதிக அளவு நிதி வழங்கியுள்ளது.

கழக கூட்டணியில் பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், தேசிய முற்போக்கு திராவிட கட்சித் தலைவர் விஜயகாந்த், தமிழ் மாநில கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உட்பட நமது கூட்டணியை சேர்ந்தவர்கள் யாவரும் மக்கள் நலனை பற்றி சிந்திக்கின்றார்கள். இப்படிப்பட்ட தலைவர்களால் சிறப்பானதொரு கூட்டணி அமைந்துள்ளது. ஆனால் நம்மை எதிர்த்து நிற்கின்ற கூட்டணியை பார்த்தால் கேலிக்கூத்தாக உள்ளது. குறிப்பாக ஸ்டாலின் சென்றமுறை முதலமைச்சராக வருவதற்கு என்னவென்னவோ செய்து பார்த்தார். டி சர்ட், ஜீன்ஸ் பேண்ட், மோட்டார், சைக்கிள் ஓட்டினார். கடையிலே போய் டீ குடித்தார். இப்படி என்னவென்னவோ செய்து மக்களை ஏமாற்ற முயன்றார். ஆனால் இறுதியில் தோற்றுப்போனார்.

அம்மா அவர்கள் 234 இடங்களில் தனித்து நின்று வெற்றி பெற்றார். நாட்டை ஆண்ட கட்சியை மீண்டும் ஆளும் வாய்ப்பை கழகத்திற்கு தமிழக மக்கள் அளித்தனர். மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக ஆன பின்பு தி.மு.க.வினர் பிரியாணி கடையில் ஓசி பிரியாணி கேட்பதும், கிடைக்காத பட்சத்தில் பிரியாணி கடைக்காரரை அடித்து உதைப்பதும், பரோட்டா கடையில் பரோட்டோ சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சண்டையிடுவது என பல்வேறு வன்முறையில் ஈடுபடுபவது தான் தி.மு.க.வினரின் வாடிக்கையாகும். அதோடு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடைபெற்றதோடு அவர்கள் நடத்திய தினகரன் நாளிதழின் அலுவலகத்தை அவர்களே எரித்து சாம்பலாக்கினர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு இன்றைய தினம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆக தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் நடைபெறுகின்றதோ அப்போதெல்லாம் வன்முறை கலாச்சாரம் காலூன்றி கொடி கட்டி பறக்கும். இத்தகைய வன்முறை கலாச்சாரம் வருவதற்காக ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் விடமாட்டேன் என்று வைகோ பேசுகிறார். வைகோ இதற்கு முன்பு “நான் உயிரோடு இருக்கும்வரை ஸ்டாலினை முதலமைச்சராக விடமாட்டேன்” என்று சவால் விட்டார். ஆனால் இப்போது என்ன ஆனதோ தெரியவில்லை.

“தமிழகத்தில் தீயசக்தியை தலைதூக்க விடமாட்டேன்” என்று புரட்சித்தலைவர் ஆரம்பித்த இந்த இயக்கத்தை இதயதெய்வம் அம்மா அவர்கள் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று 28 ஆண்டுகள் வளர்த்து வந்தார். கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் இருபெரும் தலைவர்களால் பேணி காக்கப்பட்ட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும். புரட்சித்தலைவர் அவர்கள் இருக்கும் போது இந்த இயக்கம் சுமார் 18 லட்சம் தொண்டர்களை கொண்ட இயக்கமாக இருந்தது. அதன் பிறகு அம்மா அவர்கள் பல்வேறு சோதனைகளை தாங்கி சுமார் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கி எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாத எஃகு கோட்டையாக கழகத்தை உருவாக்கி நம்மிடம் தந்திருக்கிறார்கள்.

நாட்டு மக்களுக்கு நல்லதொரு திட்டங்களை வழங்கும் அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது. மக்களை பற்றி சிந்திக்கின்ற இயக்கங்கள் ஒன்றுசேர்ந்து நல்லதொரு கூட்டணி அமைத்துள்ளனர். எனவே நடைபெறவிருக்கின்ற திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக வெற்றி வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் அவர்களும், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் கழக வெற்றி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்புடன் பணியாற்றிய மரகதம் குமரவேல் அவர்களும் போட்டியிடுகிறார்கள். இந்த பகுதியில் ஏற்கெனவே நடைபெற்ற நலப்பணிகளை துரிதப்படுத்தவும், புதிய திட்டங்களை இந்த பகுதிக்கு கொண்டுவருவதற்கும் நமது வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பெற செய்வீர்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.