தற்போதைய செய்திகள்

ஈஸ்வரனின் பொய்யான புகாருக்கு அமைச்சர் பி.தங்கமணி பதிலடி – ஆதாரம் இல்லாமல் பேசி விளம்பரப்படுத்திக் கொள்ள பார்க்கிறார்…

நாமக்கல்:-

ராசிபுரம் கொங்கு மண்டப விவகாரம் தொடர்பாக ஈஸ்வரனின் பொய்யான புகாருக்கு அமைச்சர் பி.தங்கமணி பதிலடி கொடுத்துள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அண்மையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.தங்கமணி பற்றி தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சர் பி.தங்கமணி  விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வேட்பாளராக நிற்கின்றவர்கள், அரசியலில் இருப்பவர்கள், பல்வேறு இயக்கங்களை சார்ந்தவர்களுக்கு விமர்சனங்கள் வருவது இயல்பு. அந்த வகையில் ராசிபுரத்தில் உள்ள கொங்கு மண்டபத்தை பற்றி ஏதோ நானும், சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சரும், ஒருவரை விலைக்கு வாங்கி விட்டதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியிருக்கிறார். நாங்கள் அவர் வீட்டிற்கு சென்றது உண்மை. நாங்கள் கழக நிகழ்ச்சி ஒன்றிற்காக நாமகிரிப்பேட்டை பகுதிக்கு ஒரு நாள் சென்றிருந்தோம். திரும்பி வருகின்ற வகையில் எங்களை வழிமறித்தார்கள், என்ன என்று விசாரித்தபோது எனது வீடு எதிர்புறம் தான் உள்ளது. வாருங்கள் என்று கூறினார்கள். அதனால் அந்த வீட்டிற்கு சென்று பேசியது உண்மை. ஆனால் அவர்கள் கொங்கு மண்டபம் பிரச்சினையை கிட்டத்தட்ட என்னை அமைச்சர் என்கிற முறையில் ஓராண்டு காலமாக சந்தித்து புகார் அளித்து வருகின்றனர்.

புகாரின் அடிப்படையில் அந்த மண்டபத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மண்டபத்தை நிறுத்திவிட்டு அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வந்தபோதுகூட நான் இது ஒரு சமுதாயம் சார்ந்த மண்டபம். அதனால் யாரும் கோபப்பட வேண்டாம், அமைதியாக பேசி தீர்த்து கொள்ளுங்கள் என்று தான் ஒருவருட காலமாக சொல்லிக் கொண்டு வருகிறோம். அந்த மண்டபத்தில் நடந்ததை எல்லாம் எங்களிடம் ஆதாரமாக கொடுத்துள்ளார்கள். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். வேட்பாளராக நிற்கின்றவர் அவரிடம் தவறில்லை என்று சொன்னால், அவர்களை அழைத்து பேசி அதில் என்ன உண்மையோ அதை அவர்களிடம் எடுத்து கூறியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த மண்டபத்தை பற்றியும்,வேட்பாளரை பற்றியும் நான் ஒரு தவறான கருத்தை சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. அந்த கொங்கு மண்டபம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம். எங்களது இயக்கத்தினுடைய எண்ணமும் இதுதான்.

அதேபோல் ஈஸ்வரன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் தேதி அறிவித்ததற்கு பின்னால், தாசில்தார்கள் எல்லாம் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னை சந்திப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்கள். அதற்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். நான் உயர் அதிகாரியிடம் புகார் செய்வேன் என்றும் ஈஸ்வரன் கூறியுள்ளார். நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன்.

நான் ஈஸ்வரனை ஒரு டீசன்ட் பொலிட்டீசியன், மெச்சூர்டி பொலிடீசியன் என்று இதுவரை சொல்லி வந்துள்ளேன். ஆனால் அவர் அதற்கு மறுபட்டவராக நடந்து கொண்டிருக்கின்றார். அதாவது தோல்வியை ஒப்புக் கொண்டு அதை வெளிப்படுத்துகின்ற வகையில் ஆதாரமில்லாத புகாரை எல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார். தேர்தல் நன்னடத்தை விதிமுறை என்று வந்ததோ அன்று முதல் இதுவரை தாசில்தார் முதல் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் வரை ஒருவர் கூட என் வீட்டிற்கு வந்தது கிடையாது.

தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக நான் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது மக்களை சந்திக்கும் போது தாசில்தார் கூட என் வீட்டிற்கு வரமாட்டார். கிராம வருவாய் அதிகாரியோ, கிராம நிர்வாக அலுவலரோ தான் வருவார்கள். ஈஸ்வரன் அதிகாரிகளை மிரட்டுவதற்காக மற்றும் அவருக்கு அதிகாரிகள் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

நான் ஒரு சிறந்த அரசியல்வாதி என்று ஈஸ்வரனை நினைத்தேன். ஆனால் அவர் ஒரு தரமற்ற அரசியல்வாதியாகதான் உள்ளார் என்று நிரூபணமாகிறது. அவர் எனது வீட்டிற்கு தாசில்தார் வந்ததாக உயர் அதிகாரியிடம் புகார் கொடுக்கட்டும். ஆனால் அந்த தாசில்தார் எனது வீட்டிற்கு எந்த தேதியில், எந்த நேரத்தில் வந்தார் என்பதை ஆதாரத்துடன் கொடுக்க வேண்டும்.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னால் எனது வீட்டிற்கு தாசில்தார் வந்ததை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு இப்போது தந்தால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தேர்தல் அறிவிப்புக்கு பின்னால் தாசில்தார் வந்ததை வீடியோ ஆதாரத்துடன் புகார் தெரிவிக்க வேண்டும். அப்படி அவர் புகார் கொடுக்கவில்லை என்று சொன்னால், அவர் கூறியது தவறான கருத்து என்று மக்கள் மத்தியில் பரப்பப்படும். தினந்தோறும் இவர் அரசியல் செய்வதற்காக என்னை வம்புக்கு இழுத்து கொண்டிருக்கிறார்.

நானும் விவாதத்திற்கு தயாராக வந்து பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் விவாதத்திற்கு தயார் என்று சொல்லியிருந்தேன். இப்போது ஈஸ்வரன் தேவையில்லாத குற்றச்சாட்டை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய இயக்கம் பெரிய இயக்கம். நான் அவரை சந்திப்பதை தவிர்க்க நினைக்கிறேன். ஏனென்றால் எங்களுக்கு இணையானவர் அவர் இல்லை.

முன்ப அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி. அவரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நேற்று தாசில்தார்கள் எனது வீட்டிற்கு வந்து என்னை சந்தித்தார்கள் என்று ஒரு பொய்யான தகவலை கூறும்போது இனிமேல் அவரை நேரில் சந்திப்பது எந்த பயனும் கிடையாது என்று நான் முடிவு செய்து விட்டேன். இனிமேல் அவர் பத்திரிக்கை நண்பர்கள் மூலம் கேள்வி கேட்கும்போது நானும் பத்திரிக்கை நண்பர்கள் மூலம் பதிலளிக்கிறேன். அவர் சார்ந்து இருக்கின்ற இயக்கத்தை சார்ந்த நகர செயலாளராக இருக்கின்ற தி.மு.க.வினர் ரயிலில் வந்து பெண்ணிடம் தகராறு செய்ததாக அவர்களை கட்சியை விட்டு நீக்கப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆக அவர் சார்ந்துள்ள இயக்கத்தினரை போல் பேசிக் கொண்டுள்ளார். அவர் பொது நல இயக்கமாக ஆரம்பித்து இன்றைய தினம் தி.மு.க.விடம் அடகு வைத்து விட்டு ஒரு சீட்டுக்காக உதயசூரியன் சின்னத்தில் போட்டி போடுபவர். தான் சார்ந்துள்ள மக்களுக்கு இவர் எப்படி பயன்படுவார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் பயந்து கொண்டு விவாதத்திற்கு வரவில்லை என்று ஈஸ்வரன் கூறுகிறார். எனக்கு எந்த சூழ்நிலையிலும் பயமில்லை.

வேண்டுமென்றால் தேர்தலுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயார். அமைச்சர் என்ற முறையில் கடந்த ஒரு வருடமாக என்னிடம் இந்த மண்டபம் தொடர்பாக ஏராளமான புகார்களை தெரிவித்து வருகின்றனர். நான் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் இந்த மண்டபம் ஒரு சமுதாயத்திற்கு சொந்தமானது. அது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். நான் அதிகாரிகளிடம் மண்டபத்தை நிறுத்த சொல்லவில்லை. இவர்களிடம் பிரச்சினை பேசி தீர்த்து கொள்ளுங்கள் என்றுதான் கூறி வருகிறேன்.

பொள்ளாச்சி விவகாரம் பொறுத்தவரை எங்களுடைய சட்டபேரவை துணைத்தலைவர் தான் இந்த பிரச்சினையை வெளிக்கொண்டு வந்துள்ளார். இப்போது நீதிமன்றத்தில் உள்ள காரணத்தினால் நேரடியாக இந்த விவகாரத்தில் நான் உள்ளே செல்ல விரும்பவில்லை. முதல்வர் அவர்கள் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார். சட்ட பேரவைத் துணைத்தலைவர் அதற்கு மேல் இண்டர்போல் விசாரணை தேவை என்று கூறியுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.