தற்போதைய செய்திகள்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு டெபாசிட் கூட கிடைக்காது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி…

மதுரை:-

புரட்சித்தலைவி அம்மாவை ஒருமையில் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தேனி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியவர் ஆண்டித்தேவர். இவர் பல்வேறு தேர்தல்களில் கழகத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். ஆண்டித்தேவரின் 11-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை எல்லீஸ்நகரில் உள்ள வீட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார், மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மதுரை மாநகர் மாவட்ட இளைஞர்அணி செயலாளர் சோலைராஜா, மதுரை புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதன் பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆண்டித்தேவர் புரட்சிதலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது அன்பை பெற்றவர், அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இந்த நினைவு நாளில் மரியாதை செலுத்தியுள்ளோம்.தேனியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அம்மாவை ஒருமையில் பேசியவர். அவருக்கு மதுரை மண்ணில் பாடம் புகட்டினோம். இங்கே பாடம் புகட்டியதால் அம்மாவை பற்றிய பேச்சுக்களை நிறுத்தி விட்டார். தற்போது அம்மாவின் ஆசிபெற்ற மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நாமெல்லாம் தெய்வமாக வணங்கக்கூடிய அம்மாவை அவதூறாக பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை, டெபாசிட் இழக்கச்செய்து அவருக்கு தேனி மாவட்ட மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் கூறியதாவது:-

தென் மாவட்ட பின் தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் ஆண்டித்தேவர். அது மட்டுமல்லாது புரட்சித்தலைவராலும், அம்மாவாலும் பாராட்டு பெற்றவர். அவருக்கு அஞ்சலி செலுத்தி அவரின் பரிபூரண ஆசியை நாங்கள் பெற்றுள்ளோம். கழக கூட்டணியின் வெற்றி 40 இடங்களிலும் பிரகாசமாக உள்ளது.ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். அப்படிப்பட்ட தொண்டனாக இருந்த என்னை புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு 20 ஆண்டு காலமாக நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித்தேர்தல்களில் அம்மாவின் சாதனைகளை எடுத்துரைத்து களப்பணி ஆற்றி வெற்றிக்கனியை அம்மாவின் பாதங்களில் சமர்ப்பித்தவன் என்பதை கூறுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன்.

அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட என்னை தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நல் வாய்ப்பினை வழங்கிய முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்லாது காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர், இந்த பகுதியில் முல்லைப்பெரியாறு பிரச்சினையில் அம்மா அவர்கள் கடுமையாக போராடி வெற்றியை தேடித் தந்துள்ளார். இது போன்ற சாதனை திட்டங்களை நாங்கள் எடுத்துரைத்து ஈ.வி.கே.இளங்கோவனை டெபாசிட் இழக்க செய்வோம்.

இவ்வாறு ஓ.ப.ரவீந்திரநாத்குமார் கூறினார்.