இந்தியா மற்றவை

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. போப்டே நியமனம்

புதுடெல்லி:-

உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சரத் அரவிந்த் போப்டேவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கையொப்பமிட்டார்.

தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகய் வரும் நவம்பர் மாதம் 17-ம் தேதியோடு ஓய்வு பெற உள்ளார். அதன்பின் 18-ம் தேதி புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவி ஏற்க உள்ளார். போப்டே 18 மாதங்கள், அதாவது 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதிவரை இந்தப் பதவியில் இருப்பார்.

உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக தற்போது ரஞ்சன் கோகய் இருந்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி நியமிக்கப்பட்ட ரஞ்சன் கோகயின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17-ம் தேதி முடிகிறது. வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் இருந்து நியமிக்கப்பட்ட முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் நவம்பர் 17-ம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பதால், தனக்குப் பின் யாரை தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் எனப் பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு கடந்த 18-ம் தேதி கடிதம் எழுதி இருந்தார்.

அதில் தனக்குப் பின் தலைமை நீதிபதியாக வருவதற்கு மூத்த நீதிபதி சரத் அரவிந்த் போப்டே பெயரை, ரஞ்சன் கோகய் பரிந்துரை செய்திருந்தார் தற்போது ரஞ்சன் கோகய்க்கு அடுத்த இடத்தில் அதாவது 2-வது இடத்தில் போப்டே இருந்து வருகிறார்.

எஸ்.ஏ.போப்டே மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். போப்டேவின் பதவிக்காலம் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி வரை இருக்கிறது மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் கடந்த 1956-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்தவரான போப்டே நாக்பூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

2000-ம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணியில் சேர்ந்து, அதன்பின் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உயர்ந்தார். அதன்பின் 2013-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக போப்டே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

46-வது தலைமை நீதிபதியாகக் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி ரஞ்சன் கோகய் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.