சிறப்பு செய்திகள்

உண்மையான அ.இ.அ.தி.மு.க நாங்கள் தான் என்பது நிரூபணமாகி விட்டது – முதலமைச்சர் பேட்டி…

சென்னை:-

உண்மையான அ.இ.அ.தி.மு.க. நாங்கள் தான் என்பது தான் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நிரூபணமாகி விட்டது. இத்தீர்ப்பு நல்ல முடிவு. நல்ல தீர்ப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கருத்து தெரிவித்தார்.

இரட்டைஇலை சின்னம் அ.இ.அ.தி.மு.க.வுக்கே உரியது என்று டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:-

டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உண்மையான அ.இ.அ.தி.மு.க. நாங்கள் தான் என்பது நிரூபணமாகி விட்டது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட இரட்டைஇலை சின்னம் கழகத்தின் மகத்தான சொத்து ஆகும். சிலர் எங்களுக்கு எதிராக சதி செய்து இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்தார்கள். அதையெல்லாம் முறியடித்து இன்று நல்ல தீர்ப்பு வந்துள்ளது.

தி.மு.க.வின் பின்னணியோடு டி.டி.வி. தினகரன் வேண்டும் என்று திட்டமிட்டு சதிசெய்த இரட்டை இலை சின்னத்தை முடக்கப்பார்த்தார். ஆனார் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. நல்லதீர்ப்பு, நல்லமுடிவு எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. இடைத்தேர்தல் எப்போது வந்தாலும், அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது;-

அ.இ.அ.தி.மு.க.வுக்கே இரட்டைஇலை சின்னம் என்பது தெளிவான இந்த தீர்ப்பின் மூலம் நிரூபணமாகி இருக்கிறது. உண்மையான அ.இ.அ.தி.மு.க நாங்கள் தான் என்பது இந்த வழக்கின் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது. இந்த இயக்கத்தை துரோகத்தின் மூலம் சிலர் அழிக்க நினைத்தார்கள். அவர்களின் சதி முறியடிக்கப்பட்டு எங்களுக்கு நல்லதீர்ப்பு கிடைத்து இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து தெரிவிக்கையில், அ.இ.அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை முடக்க நினைத்து சதி செய்தவர்கள் இன்று தலைகுனிந்து நிற்கிறார்கள். அவர்களின் துரோகத்திற்கு கிடைத்த சரியான சம்மட்டி அடி தான் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்று கூறினார்.