நீலகிரி

உதகை, குன்னூர் மலை ரயில்கள் இன்று முதல் இயக்கம்

நீலகிரி 

விடுமுறை காலத்தை முன்னிட்டு உதகை-கேத்தி, குன்னூர்-ரன்னிமேடு இடையேயான இன்பச்சுற்றுலா சிறப்பு மலை ரயில்களின் இயக்கம் இன்று 16-ந்தேதி முதல் தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயில்கள் 2020-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி வரை அனைத்து நாள்களிலும் இயக்கப்படும்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறை, பொங்கல் பண்டிகை ஆகிய விடுமுறைக் காலங்களை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் “இன்பச் சுற்றுலா’ என்ற பெயரில் இன்று 16-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரையில் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் அனைத்து நாள்களிலும் குன்னூரில் இருந்து காலை 11.30 மணிக்குப் புறப்படும் ரயில் பகல் 12 மணிக்கு ரன்னிமேடு ரயில் நிலையத்தை சென்றடையும். பின்னர் அங்கிருந்து பகல் 1 மணிக்குப் புறப்பட்டு 1.30 மணிக்கு குன்னூரை வந்தடையும்.

இதேபோல, உதகை -கேத்தி இடையேயான சிறப்பு ரயில் உதகையில் இருந்து பகல் 1 மணிக்குப் புறப்பட்டு 1.30 மணிக்கு கேத்தியை சென்றடையும். பின்னர் அங்கிருந்து பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு உதகை வந்தடையும். இந்த இரண்டு சிறப்பு மலை ரயிலிலும் தலா 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இவற்றில் 56 இருக்கைகளுடன் இரண்டு முதல் வகுப்பு பெட்டிகளும், 30 இருக்கைகளுடன் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும். முதல் வகுப்பில் பயணிக்க ரூ.420, இரண்டாம் வகுப்பில் பயணிக்க ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரூ.100 மதிப்பிலான பரிசுப் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.

குன்னூர்-ரன்னிமேடு இடையேயான ரயில் சேவையில் தோட்டக்கலைத் துறையின் காட்டேரி பூங்காவை பார்வையிடுவதற்கான நுழைவுச் சீட்டு இலவசமாகத் தரப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முன்பதிவு செய்யப்படும்.

இத்தகவலை சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.