தற்போதைய செய்திகள்

உதவாக்கரை பட்ஜெட் என்பதா? ஸ்டாலினுக்கு செம்மலை கண்டனம்…

சென்னை

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டை உதவாக்கரை பட்ஜெட் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை சரமாரிக் கேள்வி எழுப்பினார்.அதைத் தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அண்ணா தி.மு.க. உறுப்பினர் செம்மலை பேசினார். அப்போது பட்ஜெட்டில் அறிவித்த பல்வேறு திட்டங்களை பாராட்டினார். தொடர்ந்து அவர் பேசும் போது கூறியதாவது:

எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அதே போல் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மீதும் மிகுந்த மரியாதை உண்டு. தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உதவாக்கரை பட்ஜெட் என தெரிவித்தது மிகுந்த வருத்தத்தை எனக்கு அளித்தது. இப்படி கடுமையான வார்த்தைகளால் கருத்து தெரிவிக்கலாமா?

பட்ஜெட்டில் எவ்வளவோ திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அத்திகடவு அவினாசி திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அது தேவையில்லாதது என்று கருதுகிறாரா?விரிவான விபத்து காப்பீடு திட்டம் அவசியமற்றதா? அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பென்ஷன் திட்டம் தேவையற்றது என்று நினைக்கிறீர்களா? 10 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் அறிவிப்பை வேண்டாம் என்று கருதுகிறாரா?

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை வேண்டாம் என்கிறாரா? 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டுவது தேவையற்றதா?கூவம் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் உள்ள குடிசைகளுக்கு பதிலாக 38 ஆயிரம் வீடுகள் கட்டும் அறிவிப்பு தேவையானதா? தேவையற்றதா? வறுமை ஒழிப்புக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அவசியமற்றதா? மாசு இல்லாத பஸ்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு அவசியமானதா? அவசியமில்லாததா?

உலக முதலீட்டாளர் மாநாடு குறித்த அவருடைய கருத்து வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மிகுந்த கஷ்டப்பட்டு அந்த மாநாட்டை நடத்தியிருக்கிறோம். அதை மாய மான் காட்சி என்கிறார். இந்த மாநாட்டின் மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. 3 லட்சத்து 431 கோடி முதலீடு தமிழகத்திற்கு வர இருக்கிறது. 10 லட்சத்து 45 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் குறை கூறுவதா?

அண்ணா தி.மு.க. தாக்கல் செய்த பட்ஜெட் என்பதால் ஆகாத திட்டங்கள் என்பதா. எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இருவரும் இணைந்து செயல்பட வேண்டும்.எனவே புரட்சித்தலைவி அம்மாவின் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.

தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும் போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். ஆசிரியர்கள் போராட்டத்தின் போது அரசாணையை எரித்தனர். அவர்கள் எரித்த அரசாணை, தி.மு.க. போட்ட அரசாணை அதைத்தான் எரித்தார்கள். அவர்கள் எரித்தது எங்களை அல்ல. உங்களை தான். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புத்திமதி சொல்லி வேலைக்கு திரும்ப சொல்லியிருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு போராட்டத்தை தூண்டும் வகையில் தூபம் போடுவது தர்மமா என்றார்.

அதற்கு தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு குறுக்கிட்டு சில விளக்கங்களை அளித்தார்.