சிறப்பு செய்திகள்

உயிரே போனாலும் தமிழ் மொழியை விட்டு கொடுக்க மாட்டோம் – வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரை

உயிரே போனாலும் தமிழ் மொழியை விட்டுக் ெகாடுக்க மாட்ேடாம் என்று தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் கே.மாணிக்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர்கள் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், முருகேசன், பேரூர் கழக செயலாளர்கள் பாப்புரெட்டி, கொரியர் கணேசன், அழகுராஜா, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்பு செயலாளர் ம.முத்துராமலிங்கம், தலைமை கழக பேச்சாளர் சிவகாசி சின்னத்தம்பி, மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

தமிழ் மொழியை காக்க தன்னுடைய உயிரை கொடுத்த தியாக சீலர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தி மொழியை திணித்த போது தமிழகத்தில் போராட்டம் வெடித்தது. பேறிஞர் அண்ணா தமிழ் மொழி எங்கள் தாய் மொழி. அதனுடன் தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்கலாம் என்று இரு மொழி கொள்கையை வேண்டும் என்றார். இதேபோல் தாங்கும் சுமையைத்தான் தாங்க முடியும். இன்னமும் சுமையை ஏற்றக்கூடாது. ஏனென்றால் சாமானிய மக்களை பாதுகாப்பது எங்கள் கடமையாகும் என்று கூறினார்.

அண்ணா வகுத்த இருமொழி கொள்கையை அனைவரும் ஏற்றனர். தற்போது கூட தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்ற பொழுது முதலமைச்சர் உள்பட நாங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் சரளமாக பேசி தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் தாய்மொழிக்கு பாதிப்பு ஏற்பட்டால் உயிரே போனாலும் விட்டுக் கொடுக்க மாட்டோம். மொழிதான் மனிதனின் அடையாளம். ஏனென்றால் விலங்கிற்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் பேசுவது மட்டும் தான். இந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை நடத்த தகுதி உள்ள ஒரே இயக்கம் அதிமுக தான்.

தமிழ் இனிமையையும், தமிழ் அழகையும் உலகிற்கு எடுத்து சொல்லும் வகையில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை பேரறிஞர் அண்ணா சென்னையில் நடத்திக் காட்டினார். அதன்பின் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை புரட்சித்தலைவர் நடத்தினார். அவரின் வழி வந்த புரட்சித்தலைவி அம்மா எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டை தஞ்சையில் நடத்தி காட்டினார். ஆனால் தமிழ் மொழியில் கதை வசனம் எழுதி அதன் மூலம் மக்களை ஏமாற்றிய கருணாநிதி ஐந்து முறை தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தபோதும் ஒருமுறைகூட உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது கிடையாது.

தமிழ் மொழிக்கு கருணாநிதி தொண்டு செய்யவில்லை. துரோகம் தான் செய்தார். கோவையில் தன் குடும்ப உறுப்பினர்களுடன் செம்மொழி மாநாடு நடத்தினார். அதற்கான நிதியை கூட ஆதிதிராவிடர் நிதியிலிருந்து எடுத்து செலவழித்தார். இதை சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் அம்மா நிரூபித்தார். ஆனால் கருணாநிதி அதை பற்றி வாய் திறக்கவில்லை.

இன்றைக்கு அம்மாவின் வழியில் தமிழுக்கு பெருமை சேர்த்து வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.10 கோடியை வழங்கியுள்ளார். இதன் மூலம் கடல் கடந்து தமிழ் மொழியை மற்ற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்

இன்றைக்கு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டுக் கொடுத்தது மட்டுமல்லாது பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு ரூ.1000 முதலமைச்சர் வழங்கியுள்ளார். எனவே வர இருக்கிற வருகின்ற பேரூராட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை கழகத்திற்கு நீங்கள் பரிசாக தர வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் ஐயப்பன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் போத்தி ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.