சிறப்பு செய்திகள்

உயிரோடு இருப்பவர்களை தீ வைத்து கொல்வது திமுகவுக்கு கைவந்த கலை – துணை முதல்வர் ஆவேசம்…

தேனி:-

பொதுச்சொத்துக்களுக்கு தீ வைப்பதும், உயிரோடு இருப்பவர்களை தீ வைத்து கொளுத்துவதும் தி.மு.க.வினருக்கு கைவந்த கலையாகும் என்று தேனி பிரச்சார கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார்.

தேனி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார், பெரியகுளம் சட்டன்ற தொகுதி கழக வேட்பாளர் மயில்சாமி ஆகியோரை ஆதரித்து  மாலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னதாக கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உலகத் தலைவர்களின் ஒருவராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் திகழ்கிறார்கள். அவர்கள் கொண்டு வந்த சமூக நலத்திட்டங்கள், அவர்கள் செய்த சாதனைகள் உலகில் வேறு எந்த தலைவர்களாலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. பல பல திட்டங்களை கொண்டு வந்து ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய பெருமை புரட்சித்தலைவி ஒருவருக்குத் தான் உண்டு.

அம்மா அவர்கள் கொண்டு வந்த திட்டத்தால் தான் இன்று கிராமப்புற மக்கள் எல்லாம் நகரங்களில் வாழும் ஏழை, எளிய மக்கள் எல்லாம் விலையில்லா அரிசி வாங்கி வயிறார உண்டு மகிழ்கிறார்கள். அது மட்டுமல்ல, அவர்களின் வாழ்வாதாரம் வளம்பெற எத்தனை திட்டங்களை கொண்டு வந்துள்ளார் அம்மா அவர்கள். ஆண்களுக்கு சமமாக பெண்களும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக ஆடு வளர்ப்பு திட்டம், கறவை மாடு வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களை எல்லாம் கொண்டு வந்து ஏழ்மையே அறவே ஒழித்த பெருமை அம்மாவுக்கு உரியது.

அது மட்டுமல்ல கிராமப்புற மக்களின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களையும் அம்மா அவர்கள் கொண்டு வந்தார். பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா சைக்கிள்கள், புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் இப்படி பிறப்பில்இருந்து அவர்கள் வாழ்நாள் வரை வேண்டிய அனைத்து உதவிகளையும் விலையில்லாமல் பெறுவதற்கு வழிவகை செய்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

எம்மதத்தினரையும் ஒரு மதத்தினராக கருதியவர். இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்கு மானியம் வழங்கினார். இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்ள மானியம், கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் செல்ல மானியம் வழங்கினார். மழை பொய்த்து விட்டால் டெல்டா விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு பல்வேறு வகை மானியங்கள் இப்படி பல திட்டங்களை கொண்டு வந்ததோடு இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பண்டிகையின்போது மசூதிகளுக்கு நோன்பு கஞ்சிக்காக அரிசி இப்படி எத்தனையே திட்டங்களை கொண்டு வந்து உலக சரித்திரத்தில் இடம் பெற்றவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

வேலைக்கு செல்லும் பெண்கள் மானியத்தில் இரு சக்கர வாகனங்கள் பெறுவதற்கும் ஆவண செய்தார். அத்தயை ஒரு அற்புதமான ஆட்சியை தமிழகத்தில் நிலை நாட்டி சென்றவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அவர்கள் வழி நின்று தான் இன்று கழக ஆட்சி தொடர்ந்து அம்மாவின் சாதனைகளை, அம்மா கொண்டு வந்த சமூக நல திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. தை பொங்கலின் போது அத்திருநாளை மகிழ்ச்சியுடன் அனைவரும் கொண்டாடுவதற்காக கழக அரசு ரூ.1000 வழங்கியது.

ஏழை தொழிலாளர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சங்கடங்கள் தீர ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ஆனால் கொடுப்பதை கெடுப்பவன் ஐயோ என்று போவான் என்பதுபோல் ஏழை மக்களுக்கு நல்லது செய்வதை கெடுப்பதற்காக தி.மு.க. வழக்கு போட்டு அதை தடுத்து நிறுத்தியிருக்கிறது. இந்த கூட்டத்தின் வாயிலாக ஒரு உறுதிமொழியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முடிந்த பின்னர் கழக அரசு அறிவித்த ரூ.2 ஆயிரமும், தொடர்ந்து மாதம் ரூ.1500 வழங்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியில் விரக்திக்கே சென்று எதை பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி வருகிறார். என்னையும், முதலமைச்சரையும் தீ வைப்பவர்கள் என்று தகாத வார்த்தைகளால் வசை பாடுகிறார். நாங்கள் வீட்டில் விளக்கு எரிய எண்ணெய் தான் கொடுப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம். தீ வைப்பதும், கருத்துக்க ணிப்பு என்ற பெயரில் வெளியிடப்பட்ட தகவலை வைத்துக் கொண்டு தங்கள் பத்திரிகை ஊழியர்களையே தீ வைத்து உயிரோடு எரித்துக் கொள்வதும் தி.மு.க.வினருக்குத் தான் கைவந்த கலை என்பதை ஸ்டாலின் மறந்து விட்டு பேசக்கூடாது.

இங்கு பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் கதிர்காமு யார்? அவருக்கு யார் கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுத்தது. எப்படி வெற்றி பெற்றார் என்பது அவரது மனசாட்சிக்கு தெரியும். கழகத்திற்கு துரோகம் செய்தவர்கள் யாரும் வென்றதும் இல்லை. நன்றாக வாழ்ந்ததாகவும் சரித்திரம் இல்லை. கதிர்காமு இதை தனிமையில் இருக்கும்போது சிந்தித்து பார்க்க வேண்டும். இப்பொழுது நமது வேட்பாளராக ஒரு சாதாரண தொண்டன் மயில்வேல் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் மிக சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு எளிய தொண்டன்.

அந்த தொண்டனுக்குத் தான் கழகம் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. அந்த பால் வடியும் முகத்தை பாருங்கள். இந்த வாய்ப்பு புரட்சித்தலைவியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்உள்ளவர்களுக்கு தான் கிடைக்கும். மற்ற கட்சியில் உள்ளவர்களுக்கு பணம் இருந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும். எனவேபெரியகுளம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் மயில்வேல் மக்களவை வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து லட்சக்கணக்கான வாக்குகள் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.