தற்போதைய செய்திகள்

உருப்படியான எந்த திட்டத்தையும் தி.மு.க. செயல்படுத்தியதே இல்லை – துணை முதல்வர் கடும் தாக்கு…

ஈரோடு:-

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 03.04.2019 அன்று வெள்ளக்கோயிலில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெங்கு (எ) ஜி.மணிமாறனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்த போது ஆற்றிய உரை வருமாறு:-

வெள்ளக்கோயிலில் கழகப் பணியினை நிறைவாகவும், பொறுப்பாகவும், தேர்தல் களப் பணிகளை பொறுப்போடும், கடமையுணர்வோடும் பணியாற்றிக் கொண்டிருக்கிற கழக நிர்வாகிகளே, பொறுப்பாளர்களே மற்றும் மெகா கூட்டணியை, வெற்றிக் கூட்டணியை வெற்றி பெற உழைத்துக் கொண்டிருக்கிற தோழமைக்கட்சி பொறுப்பாளர்களே, நிர்வாகிகளே அனைவருக்கும் எனது பணிவான நல்வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெங்கு (எ) ஜி.மணிமாறன் நல்லபல திட்டங்களை கொண்டு வரும் உயரிய நோக்கத்துடன், இத்தொகுதியில் மத்திய-மாநில அரசின் பல்நோக்கு திட்டங்களை, மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்து சேர்க்கும் நல்ல வேட்பாளராகவும், மேன்மேலும் இத்தொகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார் என்பதை இந்த நல்ல நேரத்தில் உங்களுக்கு நான் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பெரியோர்களே, அன்புள்ளம் கொண்ட தாய்மார்களே, சகோதர சகோதரிகளே, வாக்காள பெருமக்களே, இளைஞர்களே என்னுடைய அன்புகலந்த நல்வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்களே எஜமானர்களாக இருந்து தீர்ப்பு அளிக்க வேண்டிய நிலையில் நல்ல வாக்காள பெருமக்களாக இருக்கிறீர்கள்.

கடந்த காலத்தில் திமுக கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்திருக்கிறது. தமிழகத்தில் இதய தெய்வம் அம்மாவின் ஆட்சியும் நடந்துள்ளது, தற்போது அம்மாவின் ஆட்சி நடைபெற்று கொண்டுவருகிறது. இதில் யார் ஆட்சிக் காலத்தில் நல்ல பல திட்டங்களை கொண்டுவந்தது, யார் ஆட்சியில் கவலைப்படாமல், தமிழகத்திற்கு ஜீவாதார பிரச்சினைகளுக்கு ஊறு வரும் போது அதைக்காப்பாற்ற ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் அதை செய்ய தவறியது யார்,யார் ஆட்சியில் நல்ல திட்டங்களையும், சமூக பாதுகாப்போடு நிறைவான திட்டங்களையும், நல்லாட்சி வழங்கினார்கள் என்று ஈரோடு மாவட்ட மக்கள் எடை போட்டு பார்க்க வேண்டும்.

அம்மா அவர்கள் 2011ல் தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றபோது மக்களுக்கு நல்லதொரு திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை, தொலைநோக்கு திட்டம் என்றால் நம் எதிர்கால சந்ததியினருக்கு 500 ஆண்டு காலம் பயன்தரக்கூடிய வகையில் உள்ள திட்டங்களை அம்மா அவர்கள் பார்த்து, பார்த்து ஒவ்வொரு திட்டங்களையும் மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், இதை வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் நிறைவாக செய்யவேண்டுமென்று என்று எண்ணிதான், 20 கிலோ அரிசியை மாதந்தோறும் விலையில்லா அரிசியாக வழங்கினார்கள். தொலைநோக்கு திட்டமாக 2023ல், ரூ.15 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு துறைகள் மூலமாக அரிய பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள்.

அத்திட்டத்தின் மூலமாக நாட்டு மக்களின் பொருளாதார நிலை உயர்வதற்கும், வாழ்வில் அடித்தளத்தில் உள்ள மக்கள் மேல்தட்டில் உள்ள மக்களுக்கு இணையாக தன்னுடைய வாழ்க்கை நடைமுறையினை சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணிதான் அம்மா அவர்கள் தொலைநோக்கு திட்டத்தை கொண்டு வந்தார்கள், தமிழகத்தில் ஏழை, எளிய குடிசை வாழும் மக்களுக்கு தரமான, உறுதியான கான்கிரீட் வீடுகளை கட்டித் தரும் நோக்கத்தோடு, தமிழகத்தில் உள்ள 16 லட்சம் குடிசை வீடுகளுக்கு பதிலாக அன்றிலிருந்து இன்று வரை கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆக 2021க்குள் தமிழகத்தை குடிசை பகுதிகளற்ற கிராமங்களாக, குடிசைப் பகுதிகளற்ற பேரூராட்சிகளாக, குடிசை பகுதிகளற்ற நகராட்சிகளாக குடிசை பகுதிகளற்ற மாநகராட்சிகளாக உறுதியாக உருவாகும் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

அம்மா அவர்கள் ஆட்சியில் பெண் குழந்தை பிறந்தால் வங்கியிலே காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு, அத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தை வளர்ந்தவுடன் 18 வயது அடைந்த பிறகு வட்டியுடன் சேர்த்து வழங்கக்கூடிய காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்த பெண் வளர்ந்து திருமண வயதை எட்டுகின்ற போது வறுமையில் உள்ள அந்த பெண்ணின் திருமணம் தடைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, திருமண நிதி உதவியாக ரூ.25,000, பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50,000, தாலிக்கு தங்கம் 4 கிராம் சேர்த்து வழங்கினார். மீண்டும் தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் அம்மா அவர்களின் ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தினை 8 கிராமாக உயர்த்தி, அம்மா அவர்களின் ஆட்சியில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

பேறுகால நிதிஉதவி ரூ.6000/- இருந்தது 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ரூ.18,000/- மாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார் இன்று நாங்கள் வழங்கி கொண்டிருக்கிறோம். மாணவ செல்வங்களுக்காக அதிக நிதியை கல்விக்காக, கல்வி துறைக்கு ஒதுக்கி 16 வகையான கல்வி உபகரணங்கள், மாணவ செல்வங்களுக்கு இலவச பாடப்புத்தகம், இலவச லேப்டாப், இலவச பஸ்பாஸ், இலவச சைக்கிள் வழங்கினார்கள். இத்தகைய உன்னதமான திட்டங்களை மக்களுக்கு வழங்கியவர், இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள்.

இந்தியாவிலேயே சாதி, சமயம் பேதமில்லாமல், சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஆட்சி செய்த ஒரே தலைவி அம்மா அவர்களின் ஆட்சி தான் தமிழகத்தை அமைதிப் பூங்கவாக மாற்றினார்கள். சிறுபான்மையினர் மக்களுக்காக புனித யாத்திரை மெக்காவிற்கு, ஜெருசலேம் செல்வதற்கு சலுகை, புனித ரம்லான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்கு 4500 மெட்ரிக் டன் அரிசி போன்ற சலுகைகளை வழங்கி அனைத்து சமுகத்திற்கும் பாதுகாப்பு அரணாகவும், அனைத்து தரப்பு மக்களும் ஒரு தாய் மக்களாக பார்த்து இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆட்சி செய்தார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நடக்கும் எங்கள் ஆட்சியில் தொடர்ந்து இதை செய்து வருகிறோம்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நடக்கும் ஆட்சியில் சமீப காலத்திற்கு முன்பு கூட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 300 லட்சம் கோடி அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில் நிறுவனங்கள் தொடங்கி அதன் மூலமாக 10 இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் திட்டங்கள் ஏற்படுத்தி ஆட்சி செய்து வருகிறோம். கடந்த காலத்தில், மத்தியில் 10 ஆண்டுக்காலம், திமுக அங்கம் வகித்து 9 அமைச்சர்கள் இருந்தார்கள், அந்த அமைச்சர்கள் எந்தவொரு தொலைநோக்கு திட்டத்தினையும், எந்தவொரு நல்ல திட்டத்தினையும் செயல்படுத்தவில்லை.

பாழாய்போன சேது-சமுத்திரம் திட்டம் என்று ஒன்றை கொண்டு வந்தார்கள் அத்திட்டத்தை அப்போதே, அம்மா அவர்கள் அத்திட்டத்தை தோல்வியடையும் என்றும், அத்திட்டத்தை செயல்படுத்தும் கடல் பகுதியில் கடலின் தன்மையானது, மணல் நகரும் தன்மையுடையது எவ்வளவு ஆழம் தோண்டினால் அந்த இடத்தில் மணல் கூடிவிடும் என்று அப்போதே இயற்கை ஆராய்ச்சி வல்லுனர் அறிக்கையில் கூறப்பட்டதை வைத்து அம்மா அவர்கள் அத்திட்டத்தை செயல்படுத்தவேண்டாம் என்று கூறினார்கள்.

ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் 40,000 கோடி ரூபாயை அத்திட்டத்தை செயல்படுத்த போட்டார்கள். அத்திட்டத்திற்கு கடலில் போட்டார்களோ, இல்லை யார் வீட்டில் போட்டார்களோ யாருக்கு தெரியும். இதுதான் திமுக-காங்கிரஸ் ஆட்சி லட்சணம் இதுதான். அதற்கு பிறகு,தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போது, தொழில் வளமிக்க ஈரோடு சுற்று வட்டாரத்தில் உள்ள திருப்பூர், பல்லடம், கோவை, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மின்சார தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. ஆனால் மத்தியில், காங்கிரஸ்-திமுக உடனான கூட்டணி ஆட்சி 2007 முதல் 2011 ஆம் ஆண்டு வரை இருந்தபோது தமிழகத்தில் திமுக தான் ஆட்சிக் கட்டிலில் இருந்தது. ஆனால் தமிழகத்திற்கு எந்தவொரு தொலைநோக்கு திட்டத்தையும் கொண்டுவந்து சேர்க்கவில்லை, உயிர்நாடியான காவேரி நதி நீர் பங்கிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

மீண்டும் அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், இந்த பிரச்சினையை தீர்க்க 2012-ம் ஆண்டு, பலமுறை டெல்லி சென்று, அன்றைய திமுக கூட்டணி ஆட்சியில் பாரத பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம், காவேரி நதிநீர் நடுவர் மன்ற ஆணையை மத்திய அரசிதழில் (கெசட்) வெளியிடுவதற்கு பலமுறை வேண்டுகோளை விடுத்தார். அதுவும் பயனில்லாமல் போனது.பிறகு உச்சநீதிமன்றம் சென்று வாதாடி, போராடி சட்டப்போராட்டம் நடத்தி அம்மா அவர்கள் 2013-ம் ஆண்டு காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்த ஒரே தலைவர், ஒரே முதலமைச்சர் அம்மா அவர்கள் தான். மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது திமுக அதை செய்யவே இல்லை.

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்ததற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மா அவர்களுக்கு தஞ்சை மண்டல விவசாயிகளின் சார்பாக நன்றிதெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அப்போது அம்மா அவர்கள் தனது 33 ஆண்டு கால அரசியல் பொதுவாழ்வில்தான் மகிழ்ச்சியடைந்த நாளாக, காவேரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் தான் என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்கள் என்பதை இவ்விடத்தில் தங்களுக்கு நினைவூட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டினை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தீ வைத்து கொளுத்தியதாக பொய் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் திமுக ஆட்சியில் தான் நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, மாமன் மச்சான் சண்டையில் மதுரையில் தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தினை எரித்து தீவைத்து கொளுத்தி மூன்று நபர்கள் உயிரிழந்தார்கள். அக்குற்றத்திற்காக நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்று அனுபவித்து வருகிறார்கள், வன்முறை கட்டவிழ்த்துவிடுவதில் திறமையான ஒரே கட்சி திமுக தான்.

இப்போது எதிர்கட்சிக்காரர்களாக இருப்பவர்கள் பிரியாணி கடையில் வாங்கி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்க வேண்டாமா? காசு கேட்டால் வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடப்பட்டு, பல்வேறு குற்றசாட்டுகளுடன், காட்டு-தர்பார் ஆட்சி செய்த திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான், எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலின் யாரோ ஒருவர் பேச்சை கேட்டுக் கொண்டு கலர்-கலராக மஞ்சள், பச்சை, சிவப்பு என சட்டை அணிந்து கொண்டு, நமக்கு நாமே திட்டம் என சொல்லிக்கொண்டு எப்படியாவது முதலமைச்சராகிவிடலாம் என கனவு கண்டு கொண்டு சைக்கிளில் வருகிறார், டிராக்டரில் வருகிறார், கரும்பு தோட்டத்தில் புகுந்து வருகிறார், ஆட்டோவில் வருகிறார், டீக்கடையில் டீ குடிக்கிறார், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டு, பொய் பிரச்சராத்தை பரப்பிக் கொண்டு வித்தை காட்டி வருகிறார், இந்த வித்தை நம்மிடம் பலிக்காது, மக்கள் யாரும் ஏமாறமாட்டார்கள். அம்மா அவர்கள் எங்களை மேலிருந்து எப்படி ஆட்சி செய்கிறார்கள், எவ்வாறு மக்களுக்கு தொண்டு செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அவர்களின் கட்டுப்பாட்டில் வளர்ந்த நாங்கள் மக்களுக்கு தொண்டு செய்வதே மகத்தானது, மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று உயரிய குறிக்கோளுடன் வாழ்ந்த அம்மா அவர்களின் வழியில் இந்த இயக்கத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு மனசாட்சியோடு ஆட்சி செய்து வருகிறோம். நல்லபல திட்டங்களை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று ஈரோடு மக்களாகிய நீங்கள் எடைப்போட்டு பார்க்கும் எஜமானர்களாக செயல்பட்டு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெங்கு (எ) ஜி.மணிமாறனை வெற்றி பெற வைத்து வரலாற்று சாதனையை நிகழ்த்துமாறு உங்களை பொற்பாதம் வணங்கி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாளும் நமதே, நாற்பதும் நமதே

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் சுற்று சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கால்நடை துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரச்சாரத்தின் போது உடனிருந்தனர்.