சிறப்பு செய்திகள்

உர பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை

தமிழக விவசாயிகளுக்கு தேவையான உரத்தை முழுவதுமாக ஒதுக்குமாறு மத்திய அமைச்சர் சதானந்தா கவுடாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் தான் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு முக்கியமான விவசாய மாதங்கள் ஆகும். எனவே இம்மூன்று மாதங்களுக்கு தேவையான உரத்தை தங்கு தடையின்றி வழங்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் மத்திய உரத்துறை அமைச்சர் சதானந்தா கவுடாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நடப்பாண்டு அக்டோபர் மாதத்திற்கு தேவையான உரம் போதுமானதாக இல்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த பருவமழை காலத்தில் தான் தமிழகத்தில் விவசாயம் தீவிரமாக செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் போதிய அளவு தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் தமிழகத்தில் உள்ள 15 பெரிய அணைகளில் விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் போய் விட்டது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் தான் தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மிகவும் உச்சகட்டத்தில் இருக்கிறது. இந்த 3 மாதங்களுக்கு 70 சதவீதத்திற்கு மேல் உரம் தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு அக்டோபர் மாதத்தில் 1.64 மெட்ரிக் டன் யூரியா வழங்க வேண்டிய நிலையில் இதுவரை 36 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் தான் மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பி இருக்கிறது. இது மொத்த தேவையில் 22 சதவீதம் தான்.

இப்பிரச்சினையை ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற வேளாண்துறை சம்பந்தப்பட்ட மாநாட்டில் தமிழ்நாட்டு அதிகாரிகள் விபரமாக எடுத்துரைத்தனர். தமிழகத்தில் இந்த பருவ காலங்களில் 7.94 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் நெல் மற்றும் சோளம் பயிரிடப்படுகிறது.

அதற்கு முன்னதாக காய்கனி போன்றவற்றிற்கு உரம் தேவைப்படுகிறது. இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் 12.7 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலங்களில் நெல் மற்றும் சோளம் விவசாயம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர், நவம்பர், மாதங்களுக்கு காவேரி டெல்டா பகுதிகளில் நெல் விவசாயம் மிகவும் உச்சகட்டத்தில் இருக்கும். எனவே இந்த இரு மாதங்களுக்கும் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு எந்தவிதமான தங்கு தடையின்றி வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.

தமிழகத்தில் ஸ்பிக் நிறுவனம் உரம் விநியோகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் கூடுதலாக உர பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த உர பற்றாக்குறையை போக்குவதற்காக தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. உர பற்றாக்குறை காரணமாக உணவு தானிய உற்பத்தியில் மந்தமான நிலைமை ஏற்பட்டு இலக்கை எட்ட முடியாமல் போய் விடும். அதனால் விவசாய பெருங்குடி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு உர விநியோகத்தை அவர்களுக்கு வழங்க வேண்டியிருக்கிறது.

2019-20 ம் ஆண்டில் 125 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியத்தை உற்பத்தி செய்ய தமிழகம் இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.எனவே அவர்களுக்கு தேவையான உரம் மற்றும் யூரியா போன்றவை தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே வரும் மாதங்களுக்கு தேவையான யூரியா மற்றும் உரம் விவசாயிகளுக்கு எந்த இடையூறும் இன்றி கிடைப்பதற்காக தமிழ்நாட்டுக்கு தேவையான யூரியாவை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தின் நகலை கழக மாநிலங்களவை உறுப்பினர்கள் வைத்திலிங்கம், நவநீத கிருஷ்ணன் ஆகியோர் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவை நேரில் சந்தித்து கொடுத்தனர். தமிழகத்துக்கு தேவையான யூரியாவை காலம் தாழ்த்தாமல் உடனடியாக அனுப்பி வைக்குமாறு அவர்கள் மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் சார்பில் கேட்டுக் கொண்டனர். அக்கடிதத்தை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா தமிழக விவசாயிகளின் நலன் காக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.