தற்போதைய செய்திகள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவச்சிலை – அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார்…

சென்னை:-

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலையை அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2018-2019ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் அறிவித்த “உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களை மின்எண்மம் செய்யும் (Digitalize) பணிக்கு ரூ. 39,34,000 நிதி ஒதுக்கீடு” செய்யப்பட்டு 1156 அரிய நூல்களின் 2,18,558 பக்கங்கள் மின்எண்மம் செய்யப்பட்டு சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்சென்னைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், கலைமாமணி, செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், தமிழ் ஆய்வு மாணவர்கள் பயன்படும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வைத்தார்.

முன்னதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நூலகக் கட்டட வளாகத்தில் கலைமாமணி, செவாலியர், டாக்டர் வி.ஜி.சந்தோசம் சார்பில் அமைக்கப்பட்ட புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையை அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்து சிறப்புறையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் வரவேற்றார். இந்நிகழ்வில் நிறுவன முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் பல்வேறுதுறைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புல உதவிப்பேராசிரியர் து.ஜானகி நன்றி நவின்றார்.