விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 6-வது லீக் ஆட்டம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் பதம் பார்த்த மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை சமாளிக்க முடியாமல் 105 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இடைவிடாது தொடுத்த ‘ஷாட்பிட்ச்’ தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் மிரண்டு போனார்கள். 6 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
இதனால் கடும் விமர்சனத்திற்குள்ளான சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஆனால் அசுரபலத்துடன் திகழும் இங்கிலாந்துக்கு சவால் அளிக்கும் வகையில் ஆடுமா? தொடர்ச்சியாக 11 ஒரு நாள் போட்டிகளில் சந்தித்து இருக்கும் தோல்விப்பயணத்துக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.