விளையாட்டு

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி ஏப்.15-ல் அறிவிப்பு…

மும்பை:-
12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை நடக்கிறது. இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. ஆசிய துணைக் கண்டத்து ரசிகர்கள் இரவு 11 மணிக்குள் கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை டி.வி.யில் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்–இரவு ஆட்டங்களிலும் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.
போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30–ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 10 நாடுகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்கின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இப்போட்டி ஜூன் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஐ.பி.எல். போட்டிகள் முடிந்த சில தினங்களில் உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளது. உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 15 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு, இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்கும். ஐ.பி.எல். தொடரில் வீரர்களின் விளையாடும் விதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு தேர்வுக்குழு அணியை அறிவிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்திய அணியில், 4-வது இடத்தில் இறங்கும் பேட்ஸ்மேன் யார்? என்பதில், சமீபகாலமாக தேர்வுக்குழு முன் கேள்வி வைக்கப்படுகிறது. எனவே, இந்த இடத்திற்கு எந்த வீரர் தேர்வு செய்யப்படுவார் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.