தற்போதைய செய்திகள்

உலக பல்கலைக் கழகங்களில் பாரதியாருக்கு சிறப்பு இருக்கை – அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

சென்னை:-

உலக பல்கலைக் கழகங்களில் பாரதியாருக்கு சிறப்பு இருக்கை அமைக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு, வானவில் பண்பாட்டு மையம் மற்றும் தமிழக அரசின் சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் முகப்பிலிருந்து பாரதி நினைவு இல்லம் வரை “ஜதி பல்லக்கு” ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழாவில் கவிஞர் வீர ராகவனுக்கு பாரதியாருக்கு சமர்ப்பிக்கப்பட்ட பொற்கிழி வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது:-

உலகளவில் புதிதாக வெளிவரும் புத்தகங்கள், நபவல்கள், கவிதைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் உடனடியாக தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் புதிய சொற்கள், பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்க `சொற்குவை’ தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உலக பல்கலைக்கழகங்களில் அமைக்கப்படும் சிறப்பு இருக்கைகளில் பாரதியாரின் பெயரிலான சிறப்பு இருக்கை ஏற்படுத்த தமிழக அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இதுவரை 8 லட்சம் பாடல்கள் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் பாரதியாரின் பாடல்களும் அடங்கும். இந்தப் பாடல்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் பேசினார்.