தற்போதைய செய்திகள்

உலக வங்கி நிதி உதவியுடன் சுகாதார சீரமைப்பு திட்டம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்…

சென்னை

சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் உலக வங்கியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்துடன் கடனுதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை உலக வங்கி குழுவினர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கரிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

மருத்துவத் துறையில் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாது மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தி தருவதிலும் இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதி உதவியுடன் 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ரூ.1300 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் என்னும் உன்னத திட்டத்தின் மூலமாக அரசு மருத்துவமனைகளில் அதி நவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் தொற்றா நோய் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சை, பேறுகால அவசர சிகிச்சை, சுகாதார தகவல் மேலாண்மை உள்ளிட்டவைகளை செயல்படுத்தி வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு 2019 முதல் 2024-ம் ஆண்டு வரை ரூ.2857.003 கோடி மதிப்பீட்டில் (அமெரிக்க டாலரில் 410 மில்லியன்) உலக வங்கி நிதிஉதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் என்ற புதிய திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான உலக வங்கியின் பங்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1999.902 கோடிகள் (அமெரிக்க டாலரில் 287 மில்லியன்கள்) தமிழ்நாடு அரசு 857.101 கோடிகள் (அமெரிக்கா டாலரின் 123 மில்லியன்கள்) கூடுதலாக முதலீடு செய்ய உள்ளது.

உலக வங்கி இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டிய நிதியினை நல்க ஒப்புக்கொண்டு 19.03.2019 அன்று சுகாதார சீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. 04.06.2019 அன்று புதுடெல்லியில் இந்திய அரசின் சார்பில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார துறை சார்பாக சமீர் குமார் காரே, தமிழக அரசின் சார்பில் தமிழக சுகாதார துறை செயலர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் உலக வங்கி சார்பில் இஷாம் அப்டோ, இயக்குநரும் (பொறுப்பு) கடன் உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சுகாதார திட்ட இயக்குநர் கிரண் குராலா, தமிழ்நாடு சுகாதார திட்டம் செல்வவிநாயகம், முனைவர் ரிபாத் ஹாசன் பங்கேற்றனர்.

இத்திட்டம் அரசு சுகாதார திட்டங்களின் உப திட்டமான நிலையான வளர்ச்சி இலக்கு (அனைவருக்கும், அனைத்து வயதினருக்குமான சுகாதார திட்டம்) என்ற குறிக்கோளுடன் 5 வருடங்களுக்கு 5.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்ததின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கிட முடியும்.

ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட தொற்றா நோய்கள் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சைத் திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளித்து நோயின் தன்மையை கட்டுப்படுத்துவதற்கும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் போன்ற தொற்றா நோய்களை தடுப்பதற்கான செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வதற்கான உரிய மேல்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் தற்போது மனநலம் சார்ந்த நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மனநலம் சார்ந்த நோய்களுக்கு உரிய சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் மனநல ஆலோசனை வழங்குவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மன நலம் குறித்த விழிப்புணர்வினை பொது மக்களிடையே ஏற்படுத்தி, தேவையான இடங்களில் மனநல ஆலோசனை மையங்கள் மற்றும் தற்கொலை தடுப்பு ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களை பெருமளவு தடுக்கவும், சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்திடவும் அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே உள்ள விபத்து காய சிகிச்சை மையங்களின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்.

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும் மகப்பேறுக்கு பின்னரும் உடல்நலம் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பச்சிளங் குழந்தைகள் மற்றும் இளம் சிறார்களின் நோயற்ற வாழ்விற்காக முழுமையான தடுப்பூசிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மற்றும் வட்ட மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்தினால் வளர்ந்த நாடுகளுக்கு இணையான உயர்தர நவீன சுகாதார சேவைகளை வழங்கும் இலக்கை தமிழ்நாடு அடைய முடியும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் கிரண் குராலா, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, தெற்காசிய நாடுகளுக்கான உலக வங்கி மேலாளர் ரேகா மேனன், முதுநிலை சுகாதார நிபுணர், குழுத்தலைவர் முனைவர் ரிபாத் ஆசன், செயலாக்க அலுவலர் ராகுல் பாண்டே, குழு உறுப்பினகள் டொமினிக், சோனம், ராபின் தாக்கூர், ரஞ்சன் வர்மா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.