சிறப்பு செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலிலும் கழகமே மகத்தான வெற்றி பெறும் – துணை முதலமைச்சர் உறுதி

திருநெல்வேலி

இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும். இத்தேர்தலில் மட்டுமல்ல அதைத்தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வரும் பொதுத்தேர்தலிலும் கழகம் மகத்தான பெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் கழக வெற்றி விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் ஆகியவை நாங்குநேரி உச்சி மாகாளியம்மன் கோயில் திடலில் நடைபெற்றது. அமைச்சர் பி.தங்கமணி தலைமை வகித்தார். கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. பிரபாகரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி நன்றி அறிவிப்பு கூட்டம் ஒரு மாநாடு போல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நாங்குநேரி தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எந்த நோக்கத்திற்காக இந்த கட்சியை தொடங்கி ஆட்சி நடத்தினாரோ அந்த நோக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கழகமும், ஆட்சியும் 100 ஆண்டுகள் இருக்கும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சொன்னதை நிரூபிக்கும் வண்ணம் நாங்குநேரி தொகுதி வெற்றி கிடைத்துள்ளது. சமுதாய சீர்திருத்தத்திற்காக தந்தை பெரியாரும், தமிழ் சமுதாயம் முன்னேற வேண்டும் என்று பேரறிஞர் அண்ணாவும், ஏழை எளிய மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் பாடுபட்டனர்.

இந்த மூன்று தலைவர்களையும் ஒருங்கே பெற்று அன்பு, அன்பு, ஆற்றல் பெற்றவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
72-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கழகத்தை தொடங்கி மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். அப்போது கழகத்தில் 18 லட்சம் உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த இயக்கத்தில் 29 ஆண்டுகள் பொதுச்செயலாளராக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்து ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்து கழகத்தை எஃகு கோட்டையாக மாற்றி அமைத்தார். எத்தனையோ சோதனைகளை சந்தித்து நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்துள்ளார். 18 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டுள்ளார்.

அம்மா அவர்கள் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த அரசின் சாதனைக்கு நீங்கள் தந்த வெற்றி ஒரு அடையாளமாக உள்ளது. எம்.பி. தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதால் இவர்கள் இனி ெஜயிக்க மாட்டார்கள் என்று தமிழக அரசை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த தொகுதி மக்கள் எங்களுக்கு மாபெரும் வெற்றியை தந்து ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்கள். நாங்கள் என்றும் இந்த தொகுதி மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

இங்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் சொன்னேன். மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவிக்கு சரிபட்டு வர மாட்டார் என்று தெரிவித்தேன். அதை நீங்கள் உறுதி செய்து மகத்தான வெற்றியை தந்திருக்கிறீர்கள். நாங்குநேரி தொகுதியை நாங்கள் சொர்க்கபூமியாக மாற்றுவோம். இந்த அரசின் திட்டங்கள் ஒவ்வொரு ஊருக்கும் வந்து சேரும். உங்களுக்கு என்ன தேவை என்பதை உங்களது சட்டமன்ற உறுப்பினரிடம் சொல்லுங்கள். அவர் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவார் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளிவர இருக்கிறது. டிசம்பர் மாதம் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலிலும் கழகம் மகத்தான வெற்றி பெறும். அதை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். மக்களுக்காக தியாக வாழ்க்கை வாழ்ந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சொன்னது போல் இந்த வெற்றி தொடரும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.