சிறப்பு செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று அம்மாவின் புகழுக்கு மணிமகுடம் சூட்டுவோம் – ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் கழகத்தினர் உறுதிமொழி ஏற்பு-

சென்னை

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று புரட்சித்தலைவி அம்மாவின் புகழுக்கு மணிமகுடம் சூட்ட உறுதி ஏற்போம் என்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் லட்சோப லட்சம் கழகத்தினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தமிழக மக்கள் இதயங்களில் தெய்வமாய் குடியிருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி சென்னையில் மாபெரும் அமைதி பேரணி நடைபெற்றது. வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தாரகையின் நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கழகத்தினர் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் அங்கு திரண்டிருந்த லட்சோப லட்சம் கழக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். உறுதிமொழியை கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாசிக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள், கழக தொண்டர்கள் திரும்ப சொல்லி ஏற்றுக் கொண்டனர். அதன் விபரம் வருமாறு:-

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின், மூன்றாம் ஆண்டு நினைவு நாளில், அஞ்சலி செலுத்தும் நாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில், கழகப் பணிகளை நிறைவேற்றிடவும், கழகத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்தவும், பின்வரும் உறுதிமொழிகளை உளப்பூர்வமாய் ஏற்போமாக:-

* இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழ்நாட்டு அரசியலில் புதிய சரித்திரங்களைப் படைத்த சாதனைச் செம்மல். சமூக நீதியில் உறுதியான நம்பிக்கை, பெண் விடுதலையில் அசைக்க முடியாத பற்றுறுதி, மதசார்பற்ற உறுதியான இறை நம்பிக்கை, எளியோருக்கு சமூகப், பொருளாதார பாதுகாப்பு அளிப்பதில், அர்ப்பணிப்பு உணர்வோடு, தனது அரசியல் பாதையை புதுமையும், புரட்சியும் நிறைந்த போர்ப் பாதையாக மாற்றி வாழ்ந்தவர், நம் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களால், தமிழ்நாடு அடைந்திட்ட வளர்ச்சிகளை, மக்களுக்கு எந்நாளும் எடுத்துக் கூறிட, உறுதி ஏற்கிறோம்.

* புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, தனது ஒப்பற்ற அறிவாற்றலால், கடின உழைப்பால், எண்ணற்ற தியாகங்களால், ஆயிரம் காலத்துப் பயிராக நிலைபெறச் செய்த, இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில், கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றிடுவோம்.

* புரட்சித்தலைவரின் தொண்டராகப் பொது வாழ்வைத் தொடங்கி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின், கொள்கை பரப்புச் செயலாளராக, பொதுச் செயலாளராக, 34 ஆண்டுகள் தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றிய, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மகத்தான தியாகத்தை, மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவோம். அம்மா அவர்களின் நிலைத்த புகழுக்குப் பெரும் புகழ் சேர்ப்போம்.

* “மக்களால் நான், மக்களுக்காகவே நான்’’ “உங்களால் நான், உங்களுக்காகவே நான்’’ “அமைதி, வளம், வளர்ச்சி’’ என்ற பாதையில், நொடிதோறும் தன்வாழ்வை, மக்களுக்கான தியாக வாழ்வாக வாழ்ந்த, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கட்டளையை ஏற்போம். “கழகம் நமக்கு என்ன செய்தது?’’ என்பதைவிட, “கழகத்திற்கு நாம் என்ன செய்தோம்?’’ என்ற கேள்வியை நம் இதயத்தில் எழுப்பி, ஒற்றுமையுடனும், உறுதியுடனும் கழகப் பணிகளை ஆற்றிடுவோம்.

* “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மக்களுக்காகவே இயங்கும்’’ என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சூளுரையை மனதிற் கொள்வோம். தமிழக மக்களுக்காக, அம்மா அவர்களின் கழக அரசு, மேற்கொண்டிருக்கும் மக்கள் நலப் பணிகளை, பட்டி தொட்டி எங்கும் எடுத்துரைப்போம். தமிழக மக்களிடையே, கழக அரசுக்கு, மென்மேலும் நல்லாதரவு பெருகிட, அயராது பணியாற்றுவோம்.

* தமிழ்நாட்டு மக்களின் உயர்வும், மகிழ்ச்சியுமே, தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு, ஏழை, எளியோருக்கும், பெண்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும், நிகரில்லாத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி, மக்கள் மனதில் நீங்காது நிறைந்திருக்கும், புரட்சித் தலைவி அம்மா அவர்களால் அமைத்துத் தந்த, கழக அரசினை, வெற்றிமேல் வெற்றி பெறச் செய்வோம்.

* அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயமாய் வாழ்ந்து, ஓய்வறியாத ஒப்பற்ற உழைப்பின் மூலம், இந்த இயக்கத்தை வளர்த்து, கட்டிக்காத்து புகழ்பெறச் செய்த, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், கழகத்தின் உண்மைத் தொண்டராகவும், நம்பிக்கைக்குரிய விசுவாசியாகவும், தொடர்ந்து உழைத்திடுவோம்.

* புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது போல, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமையாகவும், கடினமாகவும் உழைத்து, மகத்தான வெற்றியைப் பெற்றது போல, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்று,
புரட்சித்தலைவி அம்மாவின் வழியில், கழகத்தை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம்.

* கழக அரசை தனது ஒப்பற்ற உழைப்பினால், உறுதிமிக்க கோட்டையாக மாற்றியவர் நம் அம்மா. தமிழ்நாட்டை தனது கடும் உழைப்பினால், அமைதிப் பூங்காவாக மாற்றியவர் நம் அம்மா. எல்லோரும், எல்லாமும் பெற வேண்டும்,
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதற்காக திட்டங்கள் பல தீட்டியவர் நம் அம்மா. ஏழை, எளியோருக்கு ஏற்றமிகு திட்டங்களைத் தீட்டியவர் நம் அம்மா. நடுத்தர மக்களுக்கு, நல்ல பல திட்டங்கள் தீட்டியவர் நம் அம்மா.
தமிழ் நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்கியவர் நம் அம்மா. அம்மா அவர்களின் வழியில், நாமும் சாதனை படைப்போம்.மக்களுக்காக இன்னும் பல திட்டங்கள் படைப்போம்.

தமிழர் உள்ளங்களில் நம் அம்மா… தமிழர் இல்லங்களில் நம் அம்மா…
இருந்தபோதும் நம் அம்மா… மறைந்த பிறகும் நம் அம்மா…
அப்போதும் நம் அம்மா… இப்போதும் நம் அம்மா… எப்போதும் நம் அம்மா…
அந்த இதய தெய்வத்தின் வழியில்
காப்போம், காப்போம், கழகத்தைக் காப்போம் !
வெல்வோம், வெல்வோம், களம் அனைத்திலும் வெல்வோம் !
புரட்சித்தலைவரின் புகழ் என்றும் வாழ்க!
புரட்சித்தலைவி அம்மாவின் புகழ் என்றென்றும் வாழ்க !
பேரறிஞர் அண்ணாவின் புகழ் வாழ்க !
தந்தை பெரியாரின் புகழ் வாழ்க !
தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழும்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வெல்க ! வெல்க !! வெல்க !!!

இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் கழகத்தினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.