தற்போதைய செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முழக்கம்…

திருவண்ணாமலை:-

பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற தி.மு.க.வுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா, மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் ஆலோசனை கூட்டம் ஆரணி சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள பாக்யலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஒரு லட்சத்து பத்தாயிரம் கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நமது தோல்விக்கு காரணம் திமுகவினர் அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி பொதுமக்கள் வாக்களித்து விட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கத்தில் சிறு குறு விவசாயிகள் 10 லட்சம் பேர் மட்டுமே கடன் பெற்றிருந்தனர். திமுகவினர் தந்த பொய்யான வாக்குறதியால் 35 லட்சம் பேர் கடன் பெற்று ஏமாந்துள்ளனர். இவ்வாறு பொதுமக்களை ஏமாற்றிய திமுகவினருக்கு வரும் உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து கழகத்தினர் தகவல் தெரிவித்தால் உடனடியாக நிறைவேற்றப்படும்.

ஆரணி பகுதியில் வறட்சி காரணமாக குடிதண்ணீர் பிரச்சினை 7 கோடி ரூபாயில் ஆழ்துளை கிணறு அமைத்து தீர்க்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் தண்ணீர் பிரச்சினைகள் உள்ளது. விரைவில் அப்பிரச்சினைகளும் தீர்க்கப்படும். நாம் மக்களுக்காக சேவை செய்கிற இயக்கம். கடந்த தேர்தலை கண்டு துவண்டுவிட கூடாது. வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அதிகம் உழைக்க வேண்டி உள்ளது. மறைந்த முதல்வர் அம்மா கூறியது போல் நமது இயக்கம் நூறாண்டு காலம் நிலைத்து நிற்கும். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கும் அளவுக்கு உங்களை நீங்கள் தயார் கொள்ளுங்கள். உள்ளாட்சியில் தீவிர பணியாற்றி வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ஜெமினி கே.ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், அரசு வழக்கறிஞர் க.சங்கர், வேலூர் பால் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர செயலளர் எ.அசோக்குமார், மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அ.கோவிந்தராசன், மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் எம்.வேலு, கண்ணமங்கலம் பேரூராட்சி செயலாளர் பாண்டியன், முன்னாள் ஒன்றிய உறுப்பினர் ப.திருமால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.