தற்போதைய செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக் கனிகளை பறித்து எம்.ஜி.ஆர்.- அம்மா நினைவிடத்தில் சமர்பிப்போம் – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. சபதம்

சென்னை

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக்கனிகளை பறித்து எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்று தென்தென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. சபதம் மேற்கொண்டார்.
சென்னை வேளச்சேரியில் தென்சென்னை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஆர்.ராஜேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் எம்.எல்.ஏ., எம்.அப்துல் அமீது, சி.பி.மூவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்களை வழங்கி வருகிறார்கள். மேலும் பல புதிய திட்டங்களை அறிவித்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, அம்மா அவர்களின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தென்சென்னை தெற்கு மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு வரும்.

எனவே மற்ற கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் சோர்ந்து போகாமல், நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்றது போல் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற உழைக்க வேண்டும். தலைமை கழகத்திலிருந்து யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அந்தந்த பகுதியை சார்ந்த கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் அயராது பாடுபட்டு வெற்றி பெற உழைக்க வேண்டும்,

கழகம் என்பது ஒரு குடும்பம். இந்த குடும்பத்தை முதலில் நேசிக்க வேண்டும். நான் கழகத்தை நேசிப்பதால் தான் என்னால் முழு அர்ப்பணிப்போடு பணியாற்ற முடிகிறது. ஒவ்வொருவரும் பல இடங்களில் வசித்து வருவதால், ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாமல் இருந்திருப்போம். இன்று கழகத்தினருக்கும், மக்களுக்கும், நல்ல உறவை ஏற்படுத்தி இருக்கிறது, ஒரு கழக உறுப்பினரின் அனைத்து நிகழ்விலும், குடும்ப உறவு போல், ஒவ்வொருவரும் கலந்து கொள்கிறோம், இந்த உறவு வருவதற்கு காரணம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்தின் வழியாக நம்மை இணைத்தார்கள். அவர்கள் நமக்கு கற்றுத்தந்த பாதையில், இன்று பயணித்து வருகிறோம்.

கழக நண்பர்கள் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும். கழக நண்பர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் நட்போடும் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அயராது பாடுபட்டு வெற்றிக்கனியை பறித்து புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களில் நினைவிடத்தில் சமர்ப்பிக்க சபதம் ஏற்போம்.

இவ்வாறு விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. பேசினார்.