திருவண்ணாமலை

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயாராகுங்கள் – கழகத்தினருக்கு, தூசி கே.மோகன் எம்.எல்.ஏ வேண்டுகோள்…

திருவண்ணாமலை:-

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இப்போதிருந்தே தயாராகுங்கள் என்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் மற்றும் நகரம் கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா செய்யாறு ஆற்காடு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமை தாங்கி கழக உறுப்பினர்கள் 34600 நபர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

பின்னர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ பேசியதாவது:- 

நடைபெற்ற முடிந்து நாடாளுமன்ற தேர்தலில் எல்லோரும் நன்றாக உழைத்தீர்கள் நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு உழைத்தீர்கள் என்பது எனக்கு தெரியும். நமது இயக்கம் மக்களுக்காக சேவை செய்கிற இயக்கம். கடந்த தேர்தலை கண்டு துவண்டுவிடக் கூடாது. வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அதிகம் உழைக்க வேண்டி உள்ளது. அம்மா அவர்கள் கூறியது போல் நமது இயக்கம் நூறாண்டு காலம் நிலைத்து நிற்கும். ஆணி வேராக இருக்க கூடிய கிளை கழக நிர்வாகிகள் ஒவ்வொரு உறுப்பினர்களின் உழைப்பும் தேவை.

உள்ளாட்சித் தேர்தல் களத்தை சந்திக்கும் அளவுக்கு உங்களை நீங்கள் தயார்படுத்தி கொள்ளுங்கள். கழகத்தை பொறுத்தவரை அனைவரும் தலைவர்தான், உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் இப்போதிருந்து இறங்கி விடுங்கள். கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளில் கலந்து கொள்ளுங்கள் சூழலுக்கு ஏற்றார் போல் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுங்கள். வீம்பிற்காக நிற்காமல் அனுசரித்து உள்ளாட்சியில் பணியாற்றுங்கள்.

இவ்வாறு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கழக பிரமுகர்கள் டி.பி.துரை, எம்.மகேந்திரன், எஸ்.கிருஷ்ணன், எம்.அரங்கநாதன், ஏ.ஜனார்த்தனன், கே.வெங்கடேசன், ஏ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், லோகநாதன், எஸ்.திருமூலன், ராஜ்கணேஷ் ரமேஷ், ஜி.கோபால், பாஸ்கர் ரெட்டியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.