தற்போதைய செய்திகள்

உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வேண்டுகோள்

விருதுநகர்:-

உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்று வாக்காளர்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30-ந்தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரவாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

சிவகாசி அருகே நடையனேரி கிராமத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செவலூர், புதுக்கோட்டை, சித்தமநாயக்கன்பட்டி, காளையார்குறிச்சி, எம்.சொக்கலிங்காபுரம், எம்.புதுப்பட்டி, தாழைபட்டி, தச்சகுடி, வடக்கு குப்பனாபுரம், கோபாலன்பட்டி, எம்.மேட்டுப்பட்டி, சுக்ரார்பட்டி, அதிவீரன்பட்டி. பள்ளபட்டி, முத்துராலிங்கபுரம் காலனி, சேனையார்புரம் காலனி, பத்ரகாளியம்மன் காலனி, காமராஜர்புரம் காலனி, லிங்கபுரம் காலனி, சாமிபுரம்காலனி, மீனாட்சி காலனி உட்பட 23 பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த இயக்கத்தையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். வகுப்புவாதம், இன வாதம் மோதல்கள் இல்லாத நல்லாட்சி நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு தேவையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும் பொங்கல் பரிசு தொகுப்பு கொடுத்து வருவது எடப்பாடியார் அரசு.

பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கவிடாமல் திமுக தடை போடுகிறது. உங்களுக்காக எல்லா வகையிலும் உழைக்ககூடிய கட்சி அண்ணா திமுக.. நான் அமைச்சராக இருக்கிறேன். வேட்பாளராக போட்டியிடும் புதுப்பட்டி கருப்பசாமி ஒன்றிய கழக செயலாளராக இருக்கிறார். புதுப்பட்டி கருப்பசாமியின் கோரிக்கையை ஏற்று இந்த பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி உட்பட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். உள்ளாட்சியில் பதவிக்கு வர கூடியவர் உங்களுக்கு உழைக்ககூடியவராக, தெரிந்தவராக இருந்தால் மட்டுமே உங்கள் பகுதிக்கு தேவையான தி்ட்டங்களை பெற முடியும்.

சிவகாசி யூனியன் தலைவராக கழகத்தை சேர்ந்தவர் வந்தால்தான் ஊராட்சி பகுதிகளில் நல்ல பணிகளை செய்ய முடியும். வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள். உங்களுக்காக உழைக்க கூடியவர்கள் அண்ணா திமுகவினர். உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.