அரியலூர்

உள்ளாட்சி தேர்தலில் கழகம் 100 சதவீதம் வெற்றி பெறும் – அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் நம்பிக்கை

அரியலூர்

வரும் உள்ளாட்சித் தேர்தலில் கழகம் 100 சதவீத வெற்றி பெறும் என்று அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் கழகம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அரியலூரில் நேற்று கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் பி.கணேசன் தலைமை வகித்தார். நகர செயலாளர் ஏ.எஸ்.எம்.கண்ணன் வரவேற்று பேசினார்.
ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், மாவட்ட கழக துணை செயலாளர் தங்க பிச்சமுத்து, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் அறிவு என்கிற சிவசுப்ரமணியன் உள்பட பலர் பேசினர்.

இக்கூட்டத்தில் அரசின் தலைமை கொறடாவும், மாவட்ட கழக செயலாளரும், அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் பேசியதாவது:-

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும், கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மிக அதிக வாக்குகளை பெற்றார்கள். அதற்காக அரியலூர் மாவட்ட மக்களுக்கும், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் நாம் சரியான வியூகம் அமைத்து செயல்பட வேண்டும்.

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பொது சின்னம் வழங்கப்படும். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, கழகம் சார்பில் ஒருவர் மட்டுமே போட்டியிட வேண்டும். அதே போல நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் பற்றி தலைமை கழகம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு, கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய பொய்யை சொல்லி தி.மு.க., வெற்றி பெற்று விட்டது. அதுவே விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க.,வுக்கு பாடமாக அமைந்து விட்டது. அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்களில் கழகம் 100 சதவீதம் வெற்றி பெறும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அரசின் தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பேசினார்.

முடிவில் அரியலூர் நகர கழக அவைத்தலைவர் வேலுசாமி நன்றி கூறினார்.