தற்போதைய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. தான் தடுத்தது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேச்சு…

திண்டுக்கல்:-

உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. தான் தடுத்தது என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசி உள்ளார்.

புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல்லில் மாவட்ட செயலாளர் வி.மருதராஜ் தலைமையில் நடைபெற்றது. பகுதி கழக செயலாளர்கள் மோகன், சேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் 3000 பேருக்கு இலவச வேட்டி, சேலை, குடம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

ஸ்டாலின், வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க. கூட்டணி அமைந்துள்ளது. இதனால் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் உள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது. இக்கூட்டணி மனம் ஒத்த கூட்டணி என ராமதாசும், அன்புமணி ராமதாசும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் ஸ்டாலினோ பணத்திற்காக சென்ற கூட்டணி என்கிறார்.

கருணாநிதி விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிந்தார் என சர்க்காரியா கமிஷன் தீர்ப்பு வழங்கியது. கருணாநிதி அண்ணாவின் பாதையில் இருந்து விலகுகிறார் என்பதாலேயே 1972ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கழகத்தை ஆரம்பித்தார் என்பதை ஸ்டாலின் மறந்து விடக் கூடாது. இவருடன் பா.ம.க சேர்ந்தால் கொள்கை கூட்டணி, ஆனால் அ.தி.மு.கவுடன் சேர்ந்தால் பணக் கூட்டணி என்பதா?

புரட்சித் தலைவி அம்மா மறைந்த 2 வருட காலத்தில் எந்த ஏழை எளிய மக்களாவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கிறதா? கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அம்மாவின் வழியில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் மானிய விலையில் வழங்கப்படும் என அம்மா அறிவித்திருந்தார். அதனை கழக அரசு செயல்படுத்தி வருகிறது. அம்மா பொங்கல் பரிசுடன் ரூ.100 வழங்கினார். அம்மாவின் அரசு பொங்கல் பரிசுடன் ரூ.1000. அ.தி.மு.க குடும்பத்திற்கு மட்டுமல்லாது அனைத்து கட்சி குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏன் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்த முடியவில்லை. கிராமத்திலும் நகரத்திலும் பணம் பெற்றவர்கள் அம்மாவையும் கழக அரசையும் பாராட்டுகின்றனர். அதனால் இதனை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் கிராமசபைக் கூட்டம் நடத்தி அதில் சாலை வசதி உள்ளதா? தண்ணீர் வசதி உள்ளதா என கேட்கின்றார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது தான் இதற்கு காரணம் என அம்மக்களிடம் பொய்யாக பேசி வருகிறார். உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது என வழக்கு போட்டதே தி.மு.க. தான். அதேபோன்று 2-வது பொய்யாக திருவாருர், திருப்பரங்குன்றத்திற்கும் தேர்தல் நடத்தவில்லை என பேசுகிறார். அத்தேர்தல் நடத்தக் கூடாது என தடை வாங்கியவர்களும் அவர்கள் தான் என்பதை பொதுமக்கள் நன்கு அறிவர். உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது ஏன் ஸ்டாலின் கிராமசபைக் கூட்டம் நடத்தவில்லை.

தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை, 6 வழிச்சாலை, பசுமை வீடுகள், சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் என பல திட்டங்களை பா.ஜ.க. அரசு தந்துள்ளது. பிரதமர் மோடி பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியுள்ளார். எல்லா வகையிலும் நரேந்திர மோடி நல்லவர். மத்தியில் அமைந்துள்ள பா.ஜ.க. அரசு ஊழல் இல்லாத அரசாக திகழ்கிறது. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகின்றது. தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்குகின்றது. 24 மணி நேரமும் தமிழக மக்களுக்காக சிந்தித்து சிந்தித்து அம்மாவின் ஆட்சியை சிறப்பாக கொண்டு செல்வது தான் தலையாய பணியாக உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்மா தலைமையில் கழகம் தனித்து நின்று 37 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அ.தி.மு.க. கூட்டணி முடிவான பின்னர் 40 தொகுதிகளிலும் கழகமே அமோக வெற்றிபெறும். 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் கழகமே அமோக வெற்றிபெறும். அந்த 21 எம்.எல்.ஏக்களும் அம்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். டி.டி.வி தினகரன் பின்னால் சென்றதால் எம்.எல்.ஏ. பதவியை இழந்து தெருவில் நிற்கின்றனர். நடைபெற உள்ள தேர்தல்களில் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே தினகரன் கட்சி பெறும். 40 தொகுதிகளிலும் 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் கழகம் 100க்கு 100 வெற்றிபெறும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.