தற்போதைய செய்திகள்

`உள்ளே தள்ளி விடுவேண்’ என பூச்சாண்டி காட்டினால் பயப்பட மாட்டோம் – புதுவை முதல்வருக்கு கழக எம்.எல்.ஏ பதிலடி…

புதுச்சேரி:-

மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய வக்கில்லாதவர் வாய் கிழிய பேசுவதா என்று பிரச்சாரத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ கடுமையாக தாக்கி பேசினார்.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியின் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து புதுச்சேரி சட்டமன்ற கழகத்தின் குழுத் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ தனது உப்பளம் தொகுதியில் வீடு,வீடாகச் சென்று மக்களை சந்தித்து ஜக்கு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இப்பிரச்சாரத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தி.மு.க வினோதமான கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தோல்வி பயத்தில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுறார். அங்கு அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. அம்மாநில கம்யூனிஸ்ட் முதல்வர் ராகுலை தோற்கடிப்பேன் என்கிறார். ராகுலுக்கு எதிராக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் புதுச்சேரியில் போட்டியிடுகிறது. தன் கட்சி தலைவரை எதிர்க்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுவாரா? எங்களை பார்த்து சூடு, சொரணை இருக்கிறதா என முதல்வர் நாராயணசாமி கேட்கிறார். முதலில் அவருக்கு சூடு, சொரணை இருக்கிறதா என்பதை அவரும், காங்கிரஸ் கட்சியினரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

திமுக துணையோடு மூன்று ஆண்டுகாலம் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் காங்கிரஸ் மக்களுக்கு என்ன நன்மை செய்துள்ளது? எந்த திட்டத்தை புதியதாக செயல்படுத்தி உள்ளது? ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்ட பயனும் மக்களை சென்றடையவில்லை. இலவச அரிசி வழங்குவதில்லை. இலவச துணி கிடையாது. முதியோர் பென்ஷன் வழங்கவில்லை. பண்டிகை கால உடை, இலவச பொருட்கள் கிடையாது.

அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது. பஞ்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை. அங்கன்வாடி, பால்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை. ரேஷன்கடை ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. கேட்டால் மத்திய அரசு மீது பழிபோட வேண்டியது. சாதாரணமான அடிப்படை உதவிகளைக் கூட செய்ய வக்கில்லாமல் மலிவு விளம்பரத்திற்காக வாய் கிழிய எதையாவது பேசுவது முதல்வர் நாராயணசாமியின் அன்றாட நிகழ்வாக ஆகிவிட்டது.

இத்தேர்தலில் கழக கூட்டணி வேட்பாளர் வெற்றிபெறுவது என்பது உறுதி செய்யப்பட்டது. இத்தேர்தல் முடிந்தவுடன் மூன்றே மாதத்தில் மக்கள் விரோத காங்கிரஸ் அரசு வீட்டுக்கு அனுப்பப்படும். நிச்சயம் கழக கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் மலரும். இதுதான் உங்களின் எண்ணம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களின் எண்ணமும் ஆகும். இதை சொன்னால் எங்களை உள்ளே தள்ளிவிடுவேன் என முதல்வர் பூச்சாண்டி காட்டுகின்றார். இந்த பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டோம் என்பதை தெரியப்படுத்தும் வகையில் உப்பளம் தொகுதி மக்கள் அனைவரும் ஜக்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று உங்கள் பாதம் தொட்டு பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ பேசினார்.