நீலகிரி

ஊட்டி குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி பிடிபட்டது…

உதகை

உதகை நகரில் நகர காவல் நிலையத்தை ஒட்டியுள்ள குடியிருப்புக்குள் புகுந்த கரடி ஒன்று சுமார் 10 மணி நேரத்துக்குப் பின் மயக்க மருந்து செலுத்திப் பிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை நகரில் உள்ள மாரியம்மன் கோயில் எதிரே புதன்கிழமை அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கரடி ஒன்று ஓடியுள்ளது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கரடியை அங்கிருந்து விரட்ட போலீஸார் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. விரட்டிய பொதுமக்களை கரடி திருப்பித் தாக்க முயன்றதால் உடனடியாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கு வந்த வனக் காவலர்கள் நீலகிரி மாவட்ட வன அலுவலர் பொறுப்பில் உள்ள செண்பகபிரியாவுக்கு தகவல் கொடுத்தனர். அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அங்கு வந்தார்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கரடியைப் பிடிக்குமாறு வனத் துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். தகவலறிந்த கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சீனிவாச ரெட்டியும் அங்கு விரைந்து வந்தார். அதன்பின்னர், வனத் துறை உதவி வனப் பாதுகாவலர் சரவணன் தலைமையில் வந்த வனத் துறையினரும், காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

எனினும் மதியம் 1 மணி ஆகியும் கால்நடை மருத்துவர் வரவில்லை. முதுமலை புலிகள் காப்பகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநரான டாக்டர் மனோகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் டாக்டர் மனோகரன் அங்கு வந்தார். பின்னர் அவர் மயக்க மருந்து அடங்கிய துப்பாக்கியால் அக்கரடியை சுட்டார். இதில் கரடி மயக்கமடைந்தது. வனத் துறையினர் விரைந்து சென்று மக்கமடைந்து கிடந்த கரடியை தயாராக வைத்திருந்த கூண்டில் ஏற்றினர்.

அந்தக் கூண்டு வனத் துறை லாரியில் ஏற்றப்பட்டு முதுமலை புலிகள் காப்பகப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கரடிக்கு மயக்கம் தெளிந்த பின்னர் அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.