திருச்சி

ஊட்டி மலை ரயிலுக்கு எழில்மிகு தோற்றத்துடன் 2 பெட்டிகள் திருச்சி பொன்மலையில் தயாரிப்பு…

திருச்சி:-

திருச்சி பொன்மலை பணிமனையில் ஊட்டி மலை ரயிலுக்கு 2 பெட்டிகள் எழில் தோற்றத்துடன் புதுவிதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கூரை கண்ணாடி போன்று அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு, ரயில் என்ஜின்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்களின் பராமரிப்பு பணிகள் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த நிதியாண்டில் ஊட்டி மலை ரயிலுக்கு 10 பெட்டிகள் புனரமைப்பு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு நீராவி என்ஜின் முழுமையாக பராமரிப்பு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு நீராவி என்ஜின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அந்த என்ஜினும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் ஊட்டி மலை ரயிலுக்கு ஏற்கனவே உள்ள பெட்டிகளை போல இல்லாமல் புதுவிதத்தில் 2 பெட்டிகள் பொன்மலை பணிமனையில் தயாரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆணை பெறப்பட்டது. அதன்படி முதன்முறையாக புதுவிதத்தில் 2 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 2 பெட்டிகளில் ஒன்று குளிர்சாதன வசதியுடையதாகும். மற்றொரு பெட்டி சாதாரண பெட்டியாகும். 2 பெட்டிகளிலும் மேற்கூரை ‘பாலிகார்பனேட்’ பொருட்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கூரை கண்ணாடி போன்று உள்ளது. பெட்டிகளில் ஜன்னல் இருக்கைகளும் வெளிப்படையாக தெரியும் வகையில் உள்ளது.

மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயிலில் பயணிகள் பயணத்தின்போது வெளிப்புற தோற்றத்தையும், வானத்தையும் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசிக்க முடியும். ஒவ்வொரு பெட்டியும் தலா 13 மீட்டர் நீளம் கொண்டதாகும். இதில் தலா 46 சாய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த இருக்கைகளை போல இல்லாமல் சொகுசு இருக்கையாக உள்ளது. பெட்டிகளின் வெளிப்புறத்தில் பசுமை நிறத்தில் இயற்கை எழில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. காட்டில் மிருகங்கள் உலா வருவது போலவும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது. பெட்டிகளின் உள்புறம் மற்றும் வெளிப்புற தோற்றம் பளபளப்பாகவும், அழகாகவும் ரசிக்கும்படி உள்ளது. 2 பெட்டிகளிலும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க ஊட்டி மலை ரயிலுக்கான 2 புதிய பெட்டிகளும் திருச்சி பொன்மலை பணிமனையில் உள்ளது. இதனை இங்கிருந்து ஓரிரு நாட்களில் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு அங்கு இயக்கப்படும். இந்த பெட்டிகளில் பயணத்தின் போது பயணிகள் புதுவித மகிழ்ச்சியை உணரமுடியும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இந்த ரயில் பெட்டிகள் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பை பெறும்.