தற்போதைய செய்திகள்

ஊழல் மட்டுமே செய்தது தான் தி.மு.க , காங்கிரசின் சாதனை – தி.மு.க.வுக்கு சரத்குமார் கடும் தாக்கு…

தேனி:-

தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் மயில்வேல் ஆகியோரை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, க.விலக்கு, தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கோம்பை, சங்கராபுரம், தேவாரம் போடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இப்பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது:-

திமுக – காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. தி.மு.க.வினர் விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர்கள் என்பதை 2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் நிரூபித்துள்ளார்கள். ஸ்டாலின் எங்கள் மெகா கூட்டணியைப் பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2011ல் கொடுத்த வாக்குறுதிகளை அனைத்து துறைகளிலும் நிறைவேற்றினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இல்லை என்றாலும் மாநிலத்தில் அம்மா ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆகியோர் சிறந்த முறையில் செயல்பட்டு தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி வருகிறார்கள்.

மத்தியில் பெரும்பான்மை உள்ள பா.ஜ.க அரசு ஆட்சி அமைத்தால் தான் மாநிலத்தில் பல்வேறு சலுகைகள் பெறவும், நிதி பெற்று நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும், என்பதால் தான் இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளது. எனவே இது சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல .நல்ல சேவை செய்யக்கூடிய கூட்டணி. தனிமனிதனை விமர்சனம் செய்யும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்றவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும். 1999 முதல் 2004 வரை தி.மு.க பா.ஜ.க.வின் கூட்டணி வைத்த போது மதவாத கட்சியாக தெரியவில்லையா?

தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்து 10 ஆண்டுகள் பயணித்து , பல்வேறு துறைகளில் ஊழல் செய்ததை மறந்து விட்டு தி.மு.க.வினர் பேசக்கூடாது. 2006ல் ஹெலிகாப்டர் வாங்குவதில் 200 மில்லியன் டாலர் ஊழல். 2008ல் 2ஜி ஸ்பெக்ட்ரமில் 1.76 லட்சம் கோடி ஊழல். 2012ல் நிலக்கரியில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல். இதுதான் தி.மு.க. காங்கிரசின் சாதனை.

காஷ்மீர் பிரச்சினையை கண்டுகொள்ளாதது. 1974ல் இந்திராகாந்தி இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கச்சத்தீவில் 285 ஏக்கர் நிலத்தை நிலத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் கச்சத்தீவை தாரை வார்த்தார். அப்போது தி.மு.க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து கொண்டு தான் காங்கிரஸ் செய்யும் ஊழலுக்கு துணைபோனது தி.மு.க.. ஈழத்தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்தது. இப்படி சந்தர்ப்பவாத கூட்டணி வைத்திருக்கும் தி.மு.க, அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்வதற்கு அருகதை இல்லை. கேரளாவில் காங்கிரசுக்கு எதிரி கம்யூனிஸ்ட். தமிழ்நாட்டில் காங்கிரசுடன் கூட்டணி. இது தான் சந்தர்ப்பவாத கூட்டணி.

இவ்வாறு ச.ம.க. தலைவர் சரத்குமார் பேசினார்.