தற்போதைய செய்திகள்

எங்களை சீண்டினால் பதிலடி கொடுப்போம் – அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்…

சென்னை, பிப். 19-

அரசியலில் சொந்த பந்தத்திற்கு இடம் கிடையாது, எங்களை சீண்டினால் பதிலடி கொடுப்போம் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில்  மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் ஒட்டுமொத்த உணர்வு அந்த ஆலை தேவையில்லை என்பதுதான். இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு.ஆலை மூடப்பட வேண்டும் என்ற வாதத்தை உச்சநீதிமன்றத்தில் ஆணித்தரமாக எடுத்து வைத்தோம். நமது வாதங்கள் வலுவாக இருந்ததால் நல்ல தீர்ப்பு வந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி விட்டது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி குறித்த அனைத்து விபரங்களும் வெளிப்படையாக தெரியவரும். கழகத்தை பொருத்தவரை யானை பலம் கொண்ட கூட்டணி அமைக்கும். யானைக்கு எப்படி தும்பிக்கை நம்பிக்கையாக இருக்கின்றதோ அதுபோல மக்களுக்கு நம்பிக்கையாக இருப்பது கழகம் தான். புரட்சித்தலைவரின் கொள்கை, அம்மாவின் கொள்கையை முழுமையாக நிறைவேற்றும் இயக்கம் அஇஅதிமுக.எனவே நாங்கள் யானை பலத்துடன் இருக்கும் காரணத்தினால் பூனை பலம் எல்லாம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.

நடிகர் கமலை நான் கடுமையாக விமர்சனம் செய்வதாக கூறுகிறார். அரசியலில் சொந்தம், பந்தம், நட்பு என்பது கிடையாது. எங்களை சீண்டினால் நாங்கள் பதில் சொல்லாமல் இருக்க மாட்டோம். யாராக இருந்தாலும் எங்களை சீண்டினால் நிச்சயமாக பதில் சொல்வோம். பதிலடி தருவோம்.

ஸ்டாலின் குறித்து நடிகர் கமல் சரியாகத்தான் கூறியுள்ளார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் நட்பும் இல்லை. எதிரியும் இல்லை. எங்களை பொறுத்தவரை எங்களுக்கு இருவர் மட்டுமே அரசியல் எதிரிகள். ஒன்று தி.மு.க.. அடுத்து லெட்டர்பேடு கட்சி. கழகம் எல்லோருக்கும் நிழல் தரக்கூடிய அரசு ஆலமரம். இங்குதான் எல்லோரும் வந்து இளைப்பாறுவார்களே தவிர நாங்கள் எங்கும் இளைப்பாற வேண்டிய அவசியம் இல்லை. ஸ்டாலினின் தந்தை தி.மு.க. தலைவராக இருந்தவர். தற்போது அந்த இடத்திற்கு ஸ்டாலின் வந்துள்ளார். அரசியலில் அவர் குழந்தையாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.