தற்போதைய செய்திகள்

எங்கள் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் நீடிக்கும் – பிரேமலதா விஜயகாந்த் தகவல்…

ஆரணி:-

எங்கள் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் நீடிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

ஆரணி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை ஆதரித்து ஆரணி அண்ணா சிலை அருகில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

2011-ம் ஆண்டு அஇஅதிமுக- தேமுதிக கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெற்றோம். தற்போது 2019-ம் ஆண்டு மீண்டும் கூட்டணி வைத்துள்ளோம். இந்த கூட்டணி மக்கள் போற்றும் கூட்டணி. மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய கூட்டணி. இந்த கூட்டணி அமையக்கூடாது என திமுக பல சூழ்ச்சிகளை செய்தது. ஆனால் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சூழ்ச்சியை
முறியடித்து இந்த வெற்றிக்கூட்டணியை அமைத்தனர்.

ஆரணி என்றாலே பட்டு சேலைதான் நினைவுக்கு வரும். இங்கு நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். நெசவாளர்களுக்கு உற்ற நண்பர்களாக, தோழர்களாக அ.இ.அ.தி.மு.க. தேமுதிக இருக்கும்.நெசவாளர்களுக்கு, வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பினால் பாதிப்பு இருக்குமேயானால் தேர்தலுக்கு பிறகு அமையப்போகும் ஆட்சியில் பிரதமரிடம் இப்பிரச்சினை குறித்து எடுத்துக்கூறி மறுபரிசீலனை செய்யக் கூறுவோம். நெசவாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதனால் விஜயகாந்த் கைத்தறி ஆடைகளை சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் வாங்கி தமிழகம் முழுவதும் கொடுத்தார்.

எதிரணியில் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து கோடிக்கணக்கில் பணத்தை கைப்பற்றியுள்ளனர். மேலும் பாதாளத்தை தோண்டி வருகின்றனர். எதிரணியினர் அமைத்திருப்பது ஊழல் கூட்டணி. கழகம் தலைமையிலான மெகா கூட்டணி உழைப்பாளர்களின் கூட்டணி. இது மக்களுக்கான கூட்டணி. மக்களை வாழவைக்கும் கூட்டணி. இக்கூட்டணி தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அமையும்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.